மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக பொய் வழக்கு பதியப்பட்ட விவகாரம்: ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

பொய் வழக்கு பதியப்பட்ட விவகாரத்தில் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

கடலூர் மாவட்டம் முதுநகர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றக்கூடிய சுதாகர் என்பவருக்கும், சண்முகம் என்பவருக்கும் இடையே பிரச்சனை இருந்துள்ளது. இதில் அன்னவல்லி பஞ்சாயத்து துணைத் தலைவர் வைத்தியலிங்கம் என்பவர் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த காவலர் சுதாகர், வைத்தியலிங்கத்தின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

தொடர்ந்து அங்கு வந்த முதுநகர் காவல்நிலைய ஆய்வாளர் ஏழுமலை, வைத்தியலிங்கத்தை வலுக்கட்டாயமாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். மேலும், அவருக்கு எதிராக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக பொய் வழக்கு பதிவு செய்து, இரவு 11 மணி வரை அவரை சட்டவிரோதமாக காவலில் வைத்துள்ளார்.

இது தொடர்பாக வைத்தியலிங்கம் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், "மதுப்பழக்கமே இல்லாத எனக்கு எதிராக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன், காவல்துறை அதிகாரிகளின் செயல் மனித உரிமை மீறல் என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது என்று கூறி வைத்தியலிங்கத்துக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த இழப்பீட்டுத் தொகையை முதுநகர் காவல் ஆய்வாளர் ஏழுமலை மற்றும் காவலர் சுதாகர் ஆகியோரிடம் இருந்து தலா ரூ.50 ஆயிரம் வீதம் வசூலித்துக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com