தவறான பதிவுகள் பக்தர்களிடம் தவறான எண்ணங்களை உருவாக்கும்: அரசியல் லாபத்திற்கு கோவிலை பயன்படுத்துவதா?- மதுரை ஐகோர்ட்டு கேள்வி

அரசியல் லாபத்திற்கு கோவிலை பயன்படுத்துவதா? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
தவறான பதிவுகள் பக்தர்களிடம் தவறான எண்ணங்களை உருவாக்கும்: அரசியல் லாபத்திற்கு கோவிலை பயன்படுத்துவதா?- மதுரை ஐகோர்ட்டு கேள்வி
Published on

கோவில் அர்ச்சகர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் அர்ச்சகர் ஜெய ஆனந்த் என்ற கரண் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு பரம்பரை வாழ் அர்ச்சகர்கள் தொடர்ந்து பூஜை மற்றும் வழிபாடுகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், நானும் அர்ச்சகராக பணியாற்றி வருகிறேன்.

இந்த நிலையில் கடந்த மாதம் எனது டுவிட்டர் பக்கத்தில் திருச்செந்தூர் கோவில் புனரமைப்பு பணிகள் குறித்த படங்களை பதிவிட்டு, அதற்கு பின்னுட்டமாக திருச்செந்தூர் முருகன் கோவில் ராஜகோபுரத்தின் கீழ் பதிக்கப்பட்டுள்ள பழமையான கருங்கற்கள் எடுக்கப்பட்டு டைல்ஸ் கற்களை பதிக்கப்படுவதாக பதிவிடப்பட்டு இருந்தது. இதைதொடர்ந்து, உண்மைக்கு புறம்பான தகவல்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இந்து சமய அறநிலையத்துறைக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி கோவில் அர்ச்சகர் பணியில் இருந்து என்னை இடைநீக்கம் செய்தனர்.

தற்காலிக பணி நீக்கம்

என்னிடம், எந்தவித விளக்கமும் கேட்காமல் அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், எனது டுவிட்டர் பக்கத்தில் நான் தெரிவித்த கருத்து தவறானது என பதிவிட்டுள்ளேன். அது கவனத்தில் எடுத்து கொள்ளப்படவில்லை. இது குறித்து அதிகாரிகளுக்கு விளக்கமும் கொடுத்துள்ளேன். இருப்பினும் என் மீதான நடவடிக்கையை திரும்ப பெறவில்லை. எனவே இடைக்கால பணி நீக்க நடவடிக்கைக்கு தடைவிதித்து உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர், தன்னை பா.ஜனதா கட்சியின் பிரமுகராக அடையாளம் காட்டி டுவிட்டர் தளத்தில் பல்வேறு தகவல்களை பதிவிட்டு வருகிறார். கோவிலில் பணியாற்றிக்கொண்டே கோவில் குறித்து தவறான அவதூறு தகவல்களை பதிவிட்டுள்ளார். இது பக்தர்களிடையே, இந்து சமய அறநிலையத்துறை குறித்த தவறான பார்வையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டதால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என இந்து சமய அறநிலையத்துறை வக்கீல் வாதிட்டார்.

அரசியல் செய்யும் இடமல்ல

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, கோவில் ஒன்றும் அரசியல் செய்யும் இடம் கிடையாது. கோவில்கள் குறித்த இதுபோன்ற பதிவுகள் பக்தர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் தவறான எண்ணங்களை உருவாக்கும். அதனால் மனுதாரரின் செயலை மன்னிக்க முடியாது.

கோவில் பணியாளராக இருந்து கொண்டு, கோவிலுக்கு எதிராக எப்படி சமூக வலைத்தளத்தில் தவறான கருத்துக்களை பரப்புகிறீர்கள்? உங்கள் அரசியல் லாபத்திற்கு கோவிலை பயன்படுத்துவதா? என கேள்வி எழுப்பினார். மேலும், தற்காலிக பணி நீக்கத்துக்கு தடை விதிக்க மறுத்ததுடன், வழக்கு குறித்து இந்து சமய அறநிலையத்துறை விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை அடுத்த மாதம் 2-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com