குடும்ப தகராறு: ஸ்வீட் மாஸ்டர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் ஸ்வீட் மாஸ்டராக வேலை பார்த்து வந்த ஒருவர், குடிபோதையில் மாமனார் வீட்டிற்கு சென்று தனது மனைவி மற்றும் மகள்களை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.
குடும்ப தகராறு: ஸ்வீட் மாஸ்டர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை காவல் எல்லைக்குட்பட்ட அச்சங்குளம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் வள்ளிநாயகம் (வயது 46). இவருக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. இவரது மனைவி முருகலட்சுமி(36). இவர்களுக்கு சுடலைவடிவு(15), உமா மகேஸ்வரி(11) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வள்ளிநாயகம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் ஸ்வீட் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.

வள்ளிநாயகத்திற்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் விடுமுறையில் ஊருக்கு வரும்போதெல்லாம் குடிபோதையில் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட கோபத்தில் முருகலட்சுமி தனது மகள்களுடன் தந்தை வீட்டிற்குச் சென்று தங்கியிருந்தார்.

நேற்று சத்தியமங்கலத்தில் இருந்து ஊருக்கு திரும்பிய வள்ளிநாயகம், குடிபோதையில் மாமனார் வீட்டிற்குச் சென்று தனது மனைவி மற்றும் மகள்களை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால், அவர்கள் வர மறுத்ததால் மிகுந்த மனவேதனை அடைந்த வள்ளிநாயகம், இரவு தனது வீட்டில் தனியாக இருந்தபோது, மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

இன்று காலையில் அவரது தாயார் சங்கரம்மாள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வள்ளிநாயகம் வீட்டின் முற்றத்தில் பிணமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பசுவந்தனை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றினர்.

தற்போது அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பசுவந்தனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com