குடும்ப தகராறில் பயங்கரம்: மாமனாரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற மருமகன்

போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சதீஷை தேடி வருகின்றனர்.
குடும்ப தகராறில் பயங்கரம்: மாமனாரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற மருமகன்
Published on

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சதீஷ். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சதீஷ் அதே பகுதியைச் சேர்ந்த பிரித்திகா என்பவரை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவதாக திருமணம் செய்து தனியாக வாழ்ந்து வந்தார்.

பிரித்திகாவிற்கு முதலாவது ஆண் குழந்தையும், இரண்டாவது பெண் குழந்தையும் பிறந்துள்ளது. பெண் குழந்தை வேண்டாம் என்று சதீஷ், பிரித்திகாவை அவரது தாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டார். பின்னர் அடிக்கடி பிரித்திகாவின் வீட்டிற்கு சென்று ஆண் குழந்தையை தன்னிடம் கொடுக்குமாறு கூறி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு மதுபோதையில் சதீஷ், மீண்டும் பிரித்திகாவின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது பிரித்திகாவின் தந்தையான ரவிக்கும், சதீஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சதீஷ், நாட்டுத் துப்பாக்கியை எடுத்து வந்து பிரித்திகாவின் தந்தையை சுட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதில் பலத்த காயமடைந்த ரவி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த உமராபாத் போலீசார் ரவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள சதீஷை தேடி வருகின்றனர்.

குடும்ப தகராறில் மாமனாரை நாட்டுத்துப்பாக்கியால் மருமகன் சுட்டுக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com