

தூத்துக்குடி.
முறப்பநாடு அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த வாலிபர் விஷ மாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் எல்லைக்குட்பட்ட கீழசெக்காரக்குடி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் அதிமூலபெருமாள் மகன் காளிபெருமாள். சமையல் வேலை செய்து வந்த இவருக்கு திருமணமாகி ஒரு வருடமே ஆகிறது. காளிபெருமாளுக்கும் இவருடைய மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் மன வருத்தத்தில் இருந்த காளிபெருமாள், கொம்புகாரநத்தம் குளத்தங்கரைப் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு உளுந்து மூட்டைக்குப் பயன்படுத்தப்படும் விஷ மாத்திரையை எடுத்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். விஷம் உடல் முழுவதும் பரவிய நிலையில் குளத்தங்கரையில் அவர் மயங்கிக் கிடந்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு, அவசர சிகிச்சைக்காக தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர், காளிபெருமாள் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.