குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை தோல்வி... பெண்ணுக்கு ரூ.60 ஆயிரம் இழப்பீடு வழங்க ஐகோர்ட்டு உத்தரவு

2021-ம் ஆண்டு ரிஹானா மீண்டும் கருவுற்று நான்காவதாக பெண் குழந்தை பிறந்தது.
குடும்ப கட்டுப்பாடு
Published on: 

சென்னை,

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வி அடைந்ததால், 4-வது குழந்தை பெற்ற பெண்ணுக்கு அரசாணையின்படி ரூ.60 ஆயிரம் இழப்பீட்டை 4 வாரத்துக்குள் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

குடும்ப கட்டுப்பாடு

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த யாசின் என்பவரது மனைவி ரிஹானா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு ஆற்காடு அரசு ஆஸ்பத்திரியில் ரிஹானா குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துக்கொண்டார். ஆனால், கடந்த 2021-ம் ஆண்டு ரிஹானா மீண்டும் கருவுற்று நான்காவதாக பெண் குழந்தை பிறந்தது. 2023-ம் ஆண்டு ரிஹானாவின் கணவர் யாசின் இறந்துவிட்டார்.

இதையடுத்து, டாக்டர்களின் அலட்சியம் காரணமாகவே குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின்னரும் 4-வது குழந்தை பிறந்துள்ளது. தற்போது கணவரையும் இழந்து தவிப்பதால் உரிய இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ரிஹானா வழக்கு தொடர்ந்தார்.

நீதிபதி

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ரிஹானாவுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவேண் டும். 4-வது குழந்தையின் கல்விச் செலவையும் ஏற்கவேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. அதில், "குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் 0.5 சதவீதம் தோல்வி ஏற்பட வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக மனுதாரரிடம் எழுத்துப்பூர்வமான ஒப்புதல் பெற்ற பிறகே அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் மீண்டும் கருவுற்ற நிலையில், கருவை அகற்றுகிறோம் எனக்கூறியும், மனுதாரர் ஏற்கவில்லை.

அரசு உத்தரவுப்படி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வியடைந்தால் ரூ.60 ஆயிரம் இழப்பீடாக வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதை கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி ரூ.3 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யவேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர். "கணவர் இழந்த நிலையில் தனி ஆளாக 4 குழந்தைகளையும் மனுதாரர் வளர்க்க சிரமப்படுவார் என்ற தனி நீதிபதியின் அனுதாபத்தை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இதை அரசு டாக்டர்களின் கவனக்குறைவு என எடுத்துக்கொள்ள முடியாது.

குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை தோல்வியடைந்தால் ரூ.60 ஆயிரம் இழப்பீடு வழங்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், ரூ.3 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், நான்காவது குழந்தையின் கல்விச்செலவை அரசே ஏற்கவேண்டும் என்றும் தனிநீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவை ஏற்கமுடியாது. அதனால், அவர் உத்தரவை ரத்து செய்கிறோம். அதேநேரம், அரசாணையின்படி ரூ.60 ஆயிரத்தை மனுதாரருக்கு 4 வாரங்களில் அரசு வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com