குடும்பத்தினர் உயிருக்கு ஆபத்து: சுடுகாட்டில் தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் நகை-பணம் மோசடி


குடும்பத்தினர் உயிருக்கு ஆபத்து: சுடுகாட்டில் தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் நகை-பணம் மோசடி
x

ரூ.1 லட்சம் பணம் கொடுத்தால் சிறப்பு பூஜைகள் செய்து தோஷங்களை நீக்கிவிடலாம்" என்று குடுகுடுப்பைகாரர் தெரிவித்தார்.

சென்னை,

திருவான்மியூரை சேர்ந்தவர் மஞ்சு. இவர் வீட்டில் தனியாக இருந்தபோது குடு குடுப்பைக்காரர் ஒருவர் வந்தார். அவர் வீட்டின் முன்பு நின்றபடி, "உனது கணவர், குழந்தைகள் உயிருக்கு ஆபத்துள்ளது. ரூ.1 லட்சம் பணம் கொடுத்தால் சிறப்பு பூஜைகள் செய்தால் தோஷங்களை நீக்கிவிடலாம்" என்று தெரிவித்தார்.

மேலும் மஞ்சுவின் கையில் கயிறு ஒன்றையும் கட்டி விட்டார். ஆனால் மஞ்சு தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்தார். எனினும் அவரிடம் தொடர்ந்து பேச்சு கொடுத்த குடுகுடுப்பைக் காரர், "நீ அணிந்திருந்த நகை, வீட்டில் இருக்கும் பணத்தை கொடுத்தால் சுடுகாட்டில் வைத்து பூஜை செய்து திருப்பிக்கொடுத்து விடுகிறேன். எல்லாம் சரியாகி விடும்" என்றார்.

இதனை நம்பிய மஞ்சு தான் அணிந்திருந்த 5 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்தை கொடுத்தார். நகை,பணத்தை வாங்கிச் சென்ற குடுகுடுப்பைக்காரர் பின்னர் திரும்பி வரவில்லை. இதற்கிடையே வேலைக்காக வெளியே சென்று இருந்த மஞ்சுவின் கணவர் வீட்டிற்கு வந்தார். அப்போது அவரிடம் நடந்ததை அப்பாவியாக கூறி மஞ்சு வருத்தம் அடைந்தார்.

இதுகுறித்து திருவான்மியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் நகை-பணத்தை அபேஸ் செய்த குடுகுடுப்பைகாரரான கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த பாலமுரளி (50) என்பவரை கைது செய்தனர்.

அவர் இதுபோல் வேறு யாரிடமாவது மோசடியில் ஈடுபட்டு இருந்தாரா? என்பது குறித்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story