வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்: இளையராஜா


வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்: இளையராஜா
x
தினத்தந்தி 16 Dec 2024 5:04 PM IST (Updated: 16 Dec 2024 5:06 PM IST)
t-max-icont-min-icon

நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள் என்று இளையராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை,

புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திவ்ய பாசுரம் இசைக் கச்சேரி நேற்று நடைபெற்றது. இந்த கச்சேரியில் இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்றார். அதன் பின்னர் அங்குள்ள ஆண்டாள் கோவிலில் வழிபாடு இளையரா நடத்தினார். அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

அப்போது ஜீயர்கள் கருவறைக்குள் சென்றபோது, இளையராஜாவும் உள்ளே சென்றார். இதைக் கண்ட ஜீயர்களும் பட்டர்களும் இளையராஜாவை கருவறைக்கு வெளியே நிற்குமாறு கூறினர். அதன் பிறகு கருவறைக்கு வெளியே சென்ற இளையராஜா, அங்கிருந்தபடியே வழிபாடு செய்தார். இதையடுத்து இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியது.

ஸ்ரீவில்லுபுத்தூர் ஆண்டாள் கோவிலின் கருவறைக்குள் இளையராஜா செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக பல்வேறு தரப்பினரும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இதனை தொடர்ந்து ஆண்டாள் கோவிலில் இளையராஜாவுக்கு நடந்தது என்ன? என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை விரிவான விளக்கம் அளித்தது. அதில் கோவில் மரபு படியும், பழக்க வழக்கபடியும் அர்த்த மண்டபம் வரை இதர நபர்கள் அனுமதிக்கப்படும் வழக்கமில்லை. அர்த்த மண்டபம் வரை அர்ச்சகர், பரிசாரகர், மடாதிபதிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

ஆண்டாள் கோவிலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா ராமானுஜ ஜீயருடன் அர்த்த மண்டப வாசல்படி ஏறியபோது, அர்த்த -மண்டபம் முன் நின்று தரிசனம் செய்யலாம் என கூறினார். ஜீயர் கூறியதை ஒப்புக் கொண்டுதான் இளையராஜாவும் அர்த்த மண்டபத்தின் முன் நின்று தரிசனம் செய்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story