‘வெற்றிப்பயணம்' பஸ்களில் ஆண்களுக்கும் கட்டணம் குறைப்பு

எக்ஸ்பிரஸ் பஸ்கள் சாதாரண பஸ்களாக வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
‘வெற்றிப்பயணம்' பஸ்களில் ஆண்களுக்கும் கட்டணம் குறைப்பு
Published on: 

சென்னை,

பெண்கள் கட்டணமில்லா பயணம் செய்யும் 'வெற்றிப்பயணம்' பஸ்களில் ஆண்களுக்கும் கட்டணம் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இது ஆண்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

வெற்றிப்பயணம்

தமிழகத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் 'மகளிர் விடியல் பயணம்' என்ற பெயரில் அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த தேர்தல் பிரசாரத்தின்போது, புறநகர் பஸ்களிலும் பெண்களுக்கு இலவச பயண அனுமதி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

பின்னர் த.வெ.க. ஆட்சியை பிடித்து விஜய் முதல்-அமைச்சரானார். தொடர்ந்து கடந்த 2-ந்தேதி காந்தி ஜெயந்தி விழாவையொட்டி, தமிழகத்தில் புறநகர் பஸ்களிலும் மகளிர் இலவசமாக பயணிக்கும் வகையில் 'வெற்றிப் பயணம்' திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். இது பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆண்களுக்கும் சலுகை

இந்த நிலையில் மகளிர் இலவசமாக பயணம் செய்யும் பஸ்களில் ஆண்களுக்கும் கட்டண சலுகை கிடைத்துள்ளது. இது ஆண் பயணிகளிடையே இன்ப அதிர்ச்சியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அதன்படி நெல்லை-திருச்செந்தூர் இடையே முன்பு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்பட்டது. அது தற்போது ரூ.38 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று நெல்லை-தூத்துக்குடி இடையே இடைநில்லா எண்ட் டூ எண்ட் பஸ்களில் டிக்கெட் கட்டணம் ரூ.50 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. எக்ஸ்பிரஸ் பஸ்களில் ரூ.40-ம், சாதாரண பஸ்களில் ரூ.35 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

விழுப்புரம், கன்னியாகுமரி

விழுப்புரம் கோட்டம் வேலூர் மண்டலம் சார்பில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வெற்றிப்பயணம் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் 128 பஸ்கள் சாதாரண பஸ்களாக மாற்றப்பட்டுள்ளதால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வெற்றிப்பயணம் பஸ்களில் ஆண்களுக்கு 10 ரூபாயாக இருந்த டிக்கெட் கட்டணம் 7 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் களியக்காவிளை, மார்த்தாண்டம், கன்னியாகுமரி போன்ற பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் பஸ்களில் டிக்கெட் கட்டணம் குறைந்துள்ளது. 65 பஸ்களில் ஆண்களுக்கும் டிக்கெட் கட்டணம் குறைந்துள்ளது.

திருச்சி

திருச்சி கோட்டத்தில் 43 எக்ஸ்பிரஸ் பஸ்கள் சாதாரண கட் டண பஸ்களாக மாற்றப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து துறையூருக்கு வழக்கமாக எக்ஸ்பிரஸ் பஸ்சாக இயக்கும்போது ரூ.40 கட்டணம் வசூலிக்கப்பட்டது. 'வெற்றிப் பயணம்' திட்டத்தில் ஆண்களுக்கு ரூ.30 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

சாதாரண பஸ்களாக வகைமாற்றம்

இதுகுறித்து நெல்லை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், "அரசு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை இடைநில்லா பஸ்கள், எக்ஸ்பிரஸ் பஸ்கள், சாதாரண பஸ்கள் மற்றும் தாழ்தள சொகுசு பஸ், டவுன் பஸ்கள் என இயக்கப்படுகின்றன. இதில் பெண்களுக்கு வெற்றிப் பயண திட்டத்தின் கீழ் இலவச பயண வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது சாதாரண பஸ்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

எனவே, அந்த பஸ்களின் எண்ணிக்கையை உயர்த்தும் நோக்கில், பல்வேறு எக்ஸ்பிரஸ் பஸ்களை சாதாரண பஸ்களாக வகை மாற்றம் செய்தோம். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் சாதாரண பஸ்களின் எண்ணிக்கை 70-ல் இருந்து 100 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இவ்வாறு சாதாரண பஸ்களாக மாற்றப்பட்ட பஸ்களில் கட்டண விகிதாசாரமும் குறைந்து உள்ளது. ஆனால் இடைநில்லா பஸ், எக்ஸ்பிரஸ் பஸ்களில் கட்டணம் குறையாமல் அதே நிலையில் உள்ளது” என்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com