தண்ணீர் இல்லாமல் கருகும் நெல் பயிர்கள்

வைகை தண்ணீர் வரத்து கால்வாய் இல்லாததுடன், மழையும் பெய்யாததால் ஆர்.எஸ்.மங்கலம் அருகே பல கிராமங்களில் தண்ணீர் இல்லாமல் நெல்பயிர்கள் காய்ந்து கருகி வருகின்றன.
தண்ணீர் இல்லாமல் கருகும் நெல் பயிர்கள்
Published on

வைகை தண்ணீர் வரத்து கால்வாய் இல்லாததுடன், மழையும் பெய்யாததால் ஆர்.எஸ்.மங்கலம் அருகே பல கிராமங்களில் தண்ணீர் இல்லாமல் நெல்பயிர்கள் காய்ந்து கருகி வருகின்றன.

பருவமழை சீசன்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் மங்கலம் சோழந்தூர், நாரணமங்கலம், ஆனந்தூர் உள்ளிட்ட பல ஊர்களிலும் நெல் விவசாயத்தில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஆண்டு பருவமழை சீசன் நடைபெற்று வரும் நிலையில் ஆர்.எஸ்.மங்கலத்தை சுற்றி பல கிராமங்களிலும் நெல் விவசாயத்தில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக சோழந்தூர், மாதவனூர், வடவயல், நாரண மங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் நெல் விவசாயத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் நெல் பயிர்கள் வளர்வதற்கு போதிய அளவு மழை பெய்யாததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து சோழந்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி மாரிமுத்து கூறியதாவது:- இந்த ஆண்டு பருவமழை சீசன் தொடங்குவதற்கு முன்புகூட ஆர்.எஸ்.மங்கலத்தை சுற்றிய பல ஊர்களிலும் நல்ல மழை பெய்தது. சீசன் தொடங்குவதற்கு முன்பே நல்ல மழை பெய்ததால் பருவ மழை சீசனில் நல்ல மழை இருக்கும் என்ற மிகுந்த எதிர்பார்ப்பில் தான் நெல் விவசாயத்தை தொடங்கினோம்.

தண்ணீர் இல்லை

ஆனால் சீசன் தொடங்கி ஒரு மாதம் முடிந்த பின்னரும் சோழந்தூர், மாதவனூர், வடவயல் நாரணமங்கலம் சுற்றிய பல கிராமங்களிலும் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் நெல் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருகின்றன.

தற்போதைய காலகட்டத்தில் நெல் பயிர்கள் நன்றாக வளர வேண்டும் என்றால் நெல் பயிர்களில் தண்ணீர் தேங்கி நின்றால் மட்டுமே நெல் பயிர்கள் வளர தொடங்கும்.

சோழந்தூர், மாதவனூர், வடவயல், நாரணமங்கலம் உள்ளிட்ட கிராமங்களுக்கு வைகை தண்ணீர் வரத்து கால்வாயும் கிடையாது. மழையை நம்பி தான் உள்ளோம். மழை பெய்தால் மட்டுமே பல கிராமங்களிலும் நெல் விவசாயம் நன்றாக இருக்கும்.

பாதிப்பு

மழை இல்லை என்றால் ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் காய்ந்து முழுமையாக பாதிக்கப்பட்டு விடும். பல கிராமங்களில் ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்டு உள்ள நெல் விவசாயத்தை காப்பாற்ற வருண பகவான் கருணை காட்டி மழை பெய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com