

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகிலுள்ள நெல்லையப்பபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52). விவசாயியான இவருக்கு சுபா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று காலை ஆறுமுகம் பருத்திப்பாடு சாலை வழியாக தனது வயலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென அவரை வழிமறித்தனர்.
அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆறுமுகத்தை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தாக்குதலை நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மூன்றடைப்பு போலீசார், ஆறுமுகத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலைக்கான பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தப்பி ஓடிய கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.