திருநெல்வேலியில் குடும்ப தகராறில் விவசாயி வெட்டிக்கொலை: வாலிபர் கைது

மூலைக்கரைப்பட்டி அருகே மாயனேரி கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயிக்கும் அவரது மனைவியின் தம்பிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
திருநெல்வேலியில் குடும்ப தகராறில் விவசாயி வெட்டிக்கொலை: வாலிபர் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகே மாயனேரி கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் மகன் ஆறுமுகபெருமாள் (வயது 40), விவசாயி. இவருடைய மனைவியின் தம்பி கிட்டு(எ) கிருஷ்ணபெருமாள்(35). இவர்கள் 2 பேருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று இரவில் ஆறுமுகபெருமாள் மூலைக்கரைப்பட்டி அருகே அம்பலம் ஊரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று விட்டு அந்த சாலையில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கிருஷ்ணபெருமாளுக்கும், ஆறுமுகபெருமாளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணபெருமாள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஆறுமுகபெருமாளை சரமாரியாக வெட்டினார். இதில் தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் கிருஷ்ணபெருமாள் அங்கிருந்து தப்பி சென்றார்.

இதனைப் பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்து மூலைக்கரைப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இறந்த ஆறுமுகபெருமாளின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் அந்த பகுதியில் பதுங்கியிருந்த கிருஷ்ணபெருமாளை போலீசார் கைது செய்தனர். மூலைக்கரைப்பட்டி அருகே குடும்ப தகராறில் விவசாயியை மைத்துனரே அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த பயங்கர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com