கூடலூர் அருகே புலி தாக்கி விவசாயி பலி

தேயிலைத் தோட்டங்கள் மற்றும் விளை நிலங்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
கூடலூர் அருகே விவசாயி ஒருவரை புலி தாக்கி, கொன்று தின்றது.
புலி தாக்கி விவசாயி பலி
Published on

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே விவசாயி ஒருவரை புலி தாக்கி, கொன்று தின்றது. அந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

புலி தாக்கி விவசாயி பலி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட லாரஸ்டன் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 54) விவசாயி. அவர் வழக்கம் போல் இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் தனது விளை நிலத்தில் விவசாயப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, புதருக்குள் மறைந்திருந்த புலி ஒன்று, திடீரென பாய்ந்து அவரை பயங்கரமாகத் தாக்கியது. எதிர்பாராத அந்த கொடூரத் தாக்குதலில் நிலைகுலைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல் பாகங்களை தின்ற புலி

ரவிச்சந்திரன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் விளை நிலத்திற்குச் சென்று தேடினர். அப்போது அங்கு கண்ட காட்சி அவர்களை உறைந்து போகச் செய்தது. ரவிச்சந்திரனைக் கொன்ற புலி, அவரது உடல் பாகங்களை கொடூரமாகத் தின்ற நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூடலூர் வனத்துறையினர் மற்றும் போலீசார், ரவிச்சந்திரனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

12 நாட்களில் 2வது பலி

அதே ஓவேலி லாரஸ்டன் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 9-ந்தேதி பாலகிருஷ்ணன் (வயது 58) என்ற மற்றொரு விவசாயி தண்ணீர் பாய்ச்ச சென்றபோது புலி தாக்கி, உடல் பாதியளவு தின்னப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அந்த சோகம் மறைவதற்குள், வெறும் 12 நாட்கள் இடைவெளியில் அதே பகுதியில் மீண்டும் ஒரு மனித உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் கடும் கோபத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.

மக்கள் போராட்டம் - கோரிக்கை

தொடர்ந்து புலி தாக்கும் சம்பவம் நடப்பதால் ஆத்திரமடைந்த ஓவேலி பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த புலி மனிதர்களை வேட்டையாடப் பழகிவிட்டதால் , உடனடியாக அதனை ஆட்கொல்லி புலியாக அறிவிக்க வேண்டும். வனத்துறையினர் உடனடியாக அப்பகுதியில் அதிநவீன கூண்டுகள் மற்றும் கேமராக்களைப் பொருத்தி புலியைப் பிடிக்க வேண்டும்.

தேயிலைத் தோட்டங்கள் மற்றும் விளை நிலங்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தற்போது வனத்துறையினர் ட்ரோன் கேமராக்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் அந்த புலியைத் தீவிரமாகக் கண்காணித்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com