மருமகள், பேரனை துப்பாக்கியால் சுட்ட விவசாயி... குடும்ப தகராறில் விபரீதம்


மருமகள், பேரனை துப்பாக்கியால் சுட்ட விவசாயி... குடும்ப தகராறில் விபரீதம்
x
தினத்தந்தி 3 Jun 2025 10:59 AM IST (Updated: 3 Jun 2025 11:01 AM IST)
t-max-icont-min-icon

குடும்பத்தகராறு காரணமாக குப்புசாமியும், லட்சுமியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சேலம்,

சேலம் மாவட்டம், வாழப்பாடி தாலுகா, தேக்கல்பட்டி ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 52), விவசாயி. இவருடைய மனைவி லட்சுமி. இவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு அங்குள்ள விவசாய தோட்டத்தில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மாதேஷ் (29), சுரேஷ் (27) என்ற 2 மகன்களும், பரமேஸ் (24) என்ற ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி வெவ்வேறு ஊர்களில் உள்ளனர்.

தேக்கல்பட்டி மந்தகாடு பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் சுரேஷ், அவருடைய மனைவி அனிதா (25), அவர்களின் மகனான 1½ வயது ஆண் குழந்தை சர்வபுத்திரன் ஆகியோரும் வசித்து வந்தனர். நேற்று சுரேஷ் கூலி வேலைக்கு வெளியே சென்றார். மதியம் குப்புசாமி குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது குடும்பத்தகராறு காரணமாக குப்புசாமியும், லட்சுமியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகராறு முற்றிய நேரத்தில் அங்கிருந்த கட்டையால் லட்சுமியை குப்புசாமி தலையில் தாக்கியதாக தெரிகிறது. அப்போது மாமியார் லட்சுமிக்கு ஆதரவாக மருமகள் அனிதா தனது 1½ வயது குழந்தை சர்வ புத்திரனை இடுப்பில் சுமந்தபடி சென்று குப்புசாமியை தடுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த குப்புசாமி, அரசு அனுமதி இன்றி கள்ளத்தனமாக வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியால் மருமகள் அனிதாவை நோக்கி சுட்டார்.

நாட்டு துப்பாக்கியில் இருந்து பாய்ந்த இரும்பு பால்ரஸ் குண்டுகள் குழந்தை சர்வபுத்திரன் மற்றும் அனிதா மீது பாய்ந்தது. இதனால் இருவரும் வலியால் அலறி துடித்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு வாழப்பாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். படுகாயமடைந்த குழந்தை சர்வபுத்திரன் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

தலையில் பலத்த காயத்துடன் மாமியார் லட்சுமி, கை மற்றும் கால் பகுதியில் குண்டு காயங்களுடன் அனிதா ஆகிய இருவரும் வாழப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே துப்பாக்கியால் சுட்டுவிட்டு மாயமான குப்புசாமியை வாழப்பாடி போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story