கள்ளக்காதலை கண்டித்த விவசாயி கொலை: மனைவி உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை

இந்த வழக்கு தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் விவசாயி ராஜலிங்கம் கொலை செய்யப்பட்டது உறுதியானது.
கள்ளக்காதலை கண்டித்த விவசாயி கொலை: மனைவி உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை
Published on: 

கிருஷ்ணகிரி,

கள்ளக்காதலை கண்டித்த விவசாயி கொல்லப்பட்ட விவகாரத்தில், மனைவி உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்காதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள ஜம்புகுட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது 33), விவசாயி. இவருக்கும் அஞ்சூர் அருகே உள்ள கொல்ரூரை சேர்ந்த சோனியா என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 10 மற்றும் 12 வயதில் இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சோனியாவுக்கும், அவரது தங்கை கணவரான சிவக்குமார் (32) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை அறிந்த ராஜலிங்கம், தனது மனைவியை கண்டித்தார். இதனால் கோபமடைந்த சோனியா, கள்ளக்காதலன் சிவக்குமாருடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினார்.

சாவில் சந்தேகம்

அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந்தேதி சோனியா, சிவக்குமார் ஆகியோர் கூலிப்படை வைத்து ராஜலிங்கத்தை அடித்துக் கொன்றனர். பின்னர் அவரது உடலை தூக்கில் தொங்கவிட்டு, தற்கொலை செய்து கொண்டது போல நாடகம் ஆடினர். இதற்கிடையே சாவில் சந்தேகம் இருப்பதாக ராஜலிங்கத்தின் குடும்பத்தினர் போச்சம்பள்ளி போலீசில் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் ராஜலிங்கம் கொலை செய்யப்பட்டது உறுதியானது.

வழக்கு விசாரணை

இதையடுத்து சோனியா, சிவக்குமார். கூலிப்படையை சேர்ந்த திருவண்ணாமலை மாவட்டம் பசுங்கரையை சேர்ந்த அஜித் (26), கீழ்பென்னாத்தூரை சேர்ந்த காளிமுத்து (26) உள்பட 5 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின் போது ஒருவர் இறந்துவிட்டார். இந்த நிலையில் இவ்வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

ஆயுள் தண்டனை

இதில் குற்றம்சாட்டப்பட்ட சோனியா உள்பட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ராஜசிம்மவர்மன் தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் லோகேஷ்குமார் வாதாடினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com