25 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் விவசாயிக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

விவசாயத்துக்காக மின் இணைப்பு கேட்டு விண்ணப்பம் செய்து, 25 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் விவசாயிக்கு 2 மாதத்துக்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
25 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் விவசாயிக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
Published on

சென்னை,

திருப்பூர் மாவட்டம், பொன்னாபுரத்தில் 3 ஏக்கர் புஞ்சை நிலத்தில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீரை இறைத்து நவீன முறையில் விவசாயம் செய்வதற்காக, 20 குதிரைத் திறன் கொண்ட மோட்டாருக்கு, மின் இணைப்பு கேட்டு 1992-ம் ஆண்டு விண்ணப்பம் செய்யப்பட்டது.

இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த தாராபுரம் செயற்பொறியாளர், 20 குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார் இணைப்புக்கு பொதுப்பணித்துறையின் தடையில்லா சான்று வேண்டும் என்று கூறினார்.

இதையடுத்து, தாராபுரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளரிடம், அந்த நிலத்தின் உரிமையாளர் பாலசுப்பிரமணியன் விண்ணப்பம் செய்தார். ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், பாலசுப்பிரமணியன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, ஆற்றுப்படுகையில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்குள் இருக்கும் கிணற்றில் 10 குதிரைத்திறன் மின் மோட்டாருக்கு மின் இணைப்பு வழங்க பொதுப் பணித்துறையின் தடையில்லா சான்று கண்டிப்பாக தேவை என்று வாதிட்டார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், மனுதாரரின் கிணறு ஆற்றுப்படுகையில் இருந்து 250 மீட்டர் தூரத்தில் இருப்பதாக கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மின் இணைப்புக்காக கடந்த 25 ஆண்டுகளாக ஒவ்வொரு துறையின் கதவுகளையும் மனுதாரர் தட்டியுள்ளார்.

கிணற்றுக்கு மின்சார இணைப்பிற்காக இவ்வளவு காலம் காத்திருத்தல் என்பது மனுதாரருக்கு மிகப்பெரிய அளவில் இழப்பை ஏற்படுத்தி இருக்கும். இப்போதாவது அதிகாரிகள் விழித்துக்கொள்ள வேண்டும்.

மனுதாரரின் விண்ணப்பத்தை 2 மாதங்களுக்குள் பரிசீலித்து மின் இணைப்பு வழங்கவேண்டும். இதுபோல தடையில்லா சான்று கோரி வருபவர்களின் விண்ணப்பத்தை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் 2 மாதங்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை செயலாளர் அறிவுறுத்த வேண்டும். இதேபோல மின்சாரத்துறையில் உள்ள செயற்பொறியாளர்களுக்கும் தமிழ்நாடு மின்துறை செயலாளர் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com