திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும் முன்னுரிமை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும் முன்னுரிமை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
x

திராவிட மாடல் ஆட்சியில் விவசாயிகளின் நலனே முக்கியம் எனமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது;

"உழவர்கள் பின்னால்தான் நாம் நிற்கிறோம் என்பதை காட்டும் வகையில் வேளாண் கண்காட்சி உள்ளது. நிலத்தில் நீர், உடலில் வியர்வையை பாய்ச்சி பூமியை பசுமையாக உழவர்கள் மாற்றுகின்றனர். விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும் முன்னுரிமை அளித்து செயல்படக்கூடிய அரசு நம் திராவிட மாடல் அரசு. விவசாயிகளுக்கு திராவிட மாடல் அரசு எப்போதும் துணையாக இருக்கும். இந்த ஆண்டு 3 முறை வேளாண் கண்காட்சியை நடத்தியுள்ளோம்.

விவசாயம், விவசாயிகளுக்கான திட்டங்களில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது. இன்று தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. பலமணி நேர வேலையை தொழில்நுட்பத்தின் மூலம் சிலமணி நேரங்களில் செய்ய முடிகிறது. விவசாயிகளின் கைகளுக்கு தொழில்நுட்பங்கள் கிடைத்தால்தான் அது உண்மையான வளர்ச்சி. தொழில்நுட்பங்களை தேடி நீங்கள் அலையக்கூடாது என்பதற்காகத்தான் கண்காட்சி நடத்துகிறோம். விவசாயத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும். பயிரிடுவதில் இருந்து சந்தைப்படுத்துவது வரை அனைத்து அம்சமும் இந்த கண்காட்சியில் உள்ளது. 13 தலைப்புகளில் வேளாண், விஞ்ஞானிகளுக்கான கலந்துரையாடல்களுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். நம் ஆட்சிக்கு சாட்சிதான் இந்த கண்காட்சி. இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

சிலர் பெயரை மாற்றுவார்கள். ஆனால் விவசாயிகளை சாலையில் போராட விட்டுவிடுவார்கள். சிலர் விவசாயி வேடம் போட்டு விவசாயத்தை கொச்சைப்படுத்துகின்றனர். ஆனால் திராவிட மாடல் ஆட்சியில் விவசாயிகளின் நலன் முக்கியம். அதனால்தான் விவசாயத்துக்காக தனி பட்ஜெட் போட்டுள்ளோம். பட்ஜெட்டின் மூலம் விவசாயிகளுக்கு 5 ஆண்டுகளில் 1 லட்சத்து 94 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். கடைசி பட்ஜெட்டில் மட்டும் 45 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளோம்.

5 ஆண்டுகளாக உரிய நேரத்தில் மேட்டூர் அணையை திறந்திருக்கிறோம். 55,750 ஏக்கர் தரிசு நிலங்களை விவசாய நிலமாக மாற்றியுள்ளோம். 125 உழவர் சந்தைகளை புனரமைத்துள்ளோம். முந்தைய ஆட்சியாளர்கள் கைவிட்ட உழவர் சந்தை திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருவண்ணாமலையில் ரூ.3 கோடியில் சிறப்பு சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும். இந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும்.”

இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story