

சென்னை,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர், விவசாயிகள் சாகுபடி செலவின வகைக்காக கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர்கடன்களில் ரூ.50 ஆயிரம் வரையான கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என நேற்று அறிவித்துள்ளார். இது தலைமுறை, தலைமுறையாக கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் துயரங்களை குறைக்காது.
தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர் கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும்” என வழங்கியுள்ள உறுதி மொழிக்கும் மாறானது.
இதுவரை விவசாயிகளுக்கான கடன் நிவாரணம் சாகுபடி நிலத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டதாகவே வழங்கப்பட்டது. இந்த வழிமுறையை மாற்றி “பண மதிப்பை” அடிப்படையாகக் கொண்டு வகுத்துள்ள புதிய முறையும் ஏற்கதக்கதல்ல.
ஏனெனில், மாவட்டத்திற்கு மாவட்டம், பயிருக்கு பயிர் சாகுபடிச் செலவுகள் மாறுபடும் என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். இதனை கருத்தில் கொண்டு தேர்தல் வாக்குறுதிப்படி 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள விவசாயிகளின் பயிர் கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்து, மறு உத்தரவு வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.