உழவர்களின் பயிர்க்கடன் தள்ளுபடி வரவேற்கத்தக்கது : அன்புமணி ராமதாஸ்

ஒரு திரைப்படத்திற்கும் 33% திரையரங்குகளுக்கு மேல் ஒதுக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
Published on

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

உழவர்களின் பயிர்க்கடன் தள்ளுபடி வரவேற்கத்தக்கது: திரைத்துறைக்கு மண்டி கிடக்கும் ஏகபோகத்தை ஒழித்து சமவாய்ப்பு வழங்க சீர்திருத்தம் செய்ய வேண்டும்

தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் உழவர்கள் பெற்ற பயிர்க்கடன்களில் குறு விவசாயிகளின் ரூ.50,000 வரையிலான பயிர்க்கடன்களை முழுமையாகவும், அதே அளவுக்கான சிறு விவசாயிகளின் பயிர்க்கடன்களில் 50 விழுக்காட்டையும் தள்ளுபடி செய்து அரசு ஆணையிட்டிருக்கிறது. 50 ஆயிரத்திற்கும் மேல் ரூ. 1 லட்சம் வரையிலான கடன்களின் ரூ.5000 முதல் ரூ.40,000 வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது முழுமையாக பயனளிக்காது என்றாலும் கூட, விவசாயிகளுக்கு ஓரளவாவது பயனளிக்க கூடிய இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டில் புதிய திரைப்படங்கள் திரையிடப்படும் போது முதல் 7 நாள்களுக்கு தினமும் 5 காட்சிகளை திரையிட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது. முதல்-அமைச்சர் திரைத்துறையிலிருந்து வந்தவர் என்பதால் இந்த சலுகை வழங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதனால் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை தயாரித்தவர்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பது மட்டும் தான் ஒற்றை பயன் ஆகும்.

தமிழ் திரையுலகம் கடந்த ஐந்தாண்டுகளாக ஒரே குடும்பத்தின் பிடியில் சிக்கி தவித்தது. அந்த குடும்பத்தின் பிடியிலிருந்து திரையுலகை மீட்டெடுக்க வேண்டும்; ஏராளமான சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழ் திரையுலகில் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட 2000-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியிட முடியாமல் முடங்கி கிடக்கின்றன. அவற்றை வெளியிட அரசு உதவி செய்ய வேண்டும்.

வார இறுதி நாள்களில் திரைப்படங்கள் திரையிடப்படும் போது, எந்த ஒரு திரைப்படத்திற்கும் 33% திரையரங்குகளுக்கு மேல் ஒதுக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். திரைத்துறையின் வீழ்ச்சிக்கு நடிகர்களுக்கு அதிக ஊதியம் தருவது தான் காரணம் என்றும், திரைப்படத்தின் மொத்த தயாரிப்பு செலவில் 80% நடிகர்களுக்கு மட்டுமே ஊதியமாக வழங்கப்படுவதாகவும் தயாரிப்பாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த நிலையை மாற்றி நடிகர்களின் ஊதியத்திற்கு உச்சவரம்பு நிர்ணயிக்கவும், அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் சமவாய்ப்பு கிடைக்கும் வகையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com