

தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் மெலட்டூர் அருகே உள்ள ரெங்கநாதபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் சுமார் 1,000 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த பகுதிகளில் தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டது. இதனால் வேதனை அடைந்த விவசாயிகள், கருகிய பயிர்களை டிராக்டர் ஏற்றி அழித்து மீண்டும் வயலில் உழவு செய்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி விவசாயிகள் வயல்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், போதுமான நீர் இருப்பு இல்லாத காரணத்தினால் மேட்டூர் அணையில் இருந்து 81 நாட்களுக் குப் பிறகு தண்ணீர் திறக்கப்பட்டது. டெல்டா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சம்பா நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
பம்பு செட்டில் இருந்து வரக்கூடிய தண்ணீர் உப்பு தண்ணீராக உள்ளதால் பயிர்களுக்கு பாய்ச்ச முடியவில்லை. இதன் காரணமாக மெலட்டூர், ரெங்கநாதபுரம், விழிதியூர், அன்னப்பன்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி பாதிக்கப்பட்டது.இதனால் கருகிய பயிர்களை டிராக்டரை ஏற்றி அழித்து வயலில் மீண்டும் உழுவு பணியில் ஈடுபட்டு வருவதால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும்.
வேளாண் துறை அமைச்சரோ, அதிகாரிகளோ, பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிடவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இல்லை என்றால் கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றனர்.