திருமலைராஜன் ஆற்றில் தூர்வாரும் பணிகள் - விவசாயிகள் மகிழ்ச்சி

இது தொடர்பான செய்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘தினத்தந்தி’ நாளிதழில் புகைப்படத்துடன் வெளியானது.
திருவாரூர்,
குடவாசல் பகுதியில் பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இந்தப் பகுதியில் விளை நிலங்களுக்கு ஆதாரமாக விளங்குவது திருமலைராஜன் ஆறு ஆகும். இந்த ஆற்றின் மூலம் கும்பகோணம், திருவிடைமருதூர், குடவாசல், நன்னிலம் மற்றும் காரைக்கால் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இதில் கண்டரமாணிக்கம், சீதக்கமங்கலம், அதம்பார், நெம்மேலி பகுதியில் இந்த ஆற்றில் புதர்கள் மண்டி, ஆற்றில் தண்ணீர் செல்ல முடியாத நிலையில் இருந்தது. இது தொடர்பான செய்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு 'தினத்தந்தி' நாளிதழில் புகைப்படத்துடன் வெளியானது.
இந்த செய்தியின் எதிரொலியாக மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் பொதுப்பணித்துறை சார்பில் நேற்று திருமலை ராஜன் ஆற்றில் செம்பியன் கூந்தலூர், சீதக்கமங்கலம், பம்மல் ஆகிய இடங்களில் போர்க்கால அடிப்படையில் எந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணியை தொடங்கி உள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள அப்பகுதி விவசாயிகள் உடன் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட'தினத்தந்தி' நாளிதழுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.






