

தஞ்சாவூர்,
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆழ்துளை கிணறு வசதி உள்ள விவசாயிகள் முன்பட்ட குறுவை சாகுபடி செய்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் நாற்று விட்டு நடவு செய்த முன்பட்ட குறுவை பயிர்கள் தற்போது கதிர் வந்து காணப்படுகின்றன. சில இடங்களில் மே மாதத்தில் நடவு செய்யப்பட்ட முன்பட்ட குறுவை நெற்பயிர்கள் கதிர் வரும் தருணத்தில் உள்ளன.
பூதலூர் அருகே மரத்தகுடி என்ற பகுதியில் சில விவசாயிகள் ஆழ்துளை கிணறு தண்ணீரை பயன்படுத்தி முன்பட்ட குறுவை சாகுபடி செய்திருந்தனர். கடுமையான வெயில் மற்றும் காற்று காரணமாக தினந்தோறும் தண்ணீர் பாய்ச்ச வேண்டிய சூழல் எழுந்துள்ளது.
தொடர்ந்து சில நாட்களாக மின்தடை ஏற்பட்டதால் தண்ணீர் பாய்ச்ச வழியின்றி நெற்பயிர்கள் காய்ந்து வருகின்றன. நடவு செய்யப்பட்ட நெல் வயல்கள் காய்ந்து வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. மின் தடை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்காததால் இந்த நிலை ஏற்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
மேட்டூர் அணை திறப்பது தற்போது சாத்தியமில்லாத சூழலில் ஆழ்துளை கிணற்று பாசனத்துக்கும் மின் தடையால் பாதிப்பு ஏற்படுவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.