கோத்தகிரியில் பச்சை தேயிலை மகசூல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

நீலகிரி மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்குவது தேயிலை விவசாயம் ஆகும்.
கோத்தகிரியில் பச்சை தேயிலை மகசூல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
பச்சை தேயிலை
Published on: 

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை மற்றும் இதமான காலநிலை காரணமாக பச்சை தேயிலை மகசூல் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் தேயிலை விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பிரதான தொழில்

நீலகிரி மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்குவது தேயிலை விவசாயம் ஆகும். இந்தத் தொழிலை மட்டுமே நம்பி லட்சக்கணக்கான சிறு தேயிலை விவசாயிகள், தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள், தனியார் மற்றும் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் வியாபாரிகள் வாழ்ந்து வருகின்றனர்.

விவசாயிகள் வேதனை

கடந்த சில ஆண்டுகளாகவே பச்சை தேயிலைக்குப் போதிய விலை கிடைக்காமல் கடும் விலை வீழ்ச்சி ஏற்பட்டது. இதனால் தேயிலை விவசாயிகள் பொருளாதார ரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர். இதற்கு முத்தாய்ப்பாக, கடந்த சில மாதங்களாகப் போதிய மழையின்றி வறட்சியான சீதோஷ்ண நிலையே நீடித்து வந்தது. இதனால் தேயிலைச் செடிகள் கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டன.

பசுமைக்கு திரும்பிய தோட்டங்கள்

இந்த இக்கட்டான சூழ்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாகப் பெய்யத் தொடங்கியது. இதைப் பயன்படுத்திக் கொண்ட விவசாயிகள், தங்களது தேயிலைத் தோட்டங்களில் உள்ள செடிகளை கவாத்து செய்தும், போதிய உரமிட்டும் தீவிரமாக பராமரித்து வந்தனர்.

தற்போது மழை ஓய்ந்து, பகல் நேரத்தில் மிதமான வெயிலுடன் கூடிய இதமான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இந்தச் சாதகமான காலநிலையால், தேயிலைத் தோட்டங்கள் மீண்டும் பசுமைக்குத் திரும்பியுள்ளன. செடிகளில் புதிய கொழுந்துகள் துளிர்விட்டு வளரத் தொடங்கியுள்ளதால், பச்சை தேயிலை மகசூல் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

அறுவடை தீவிரம்

மகசூல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தேயிலைத் தோட்டங்களில் கை அரிவாள் மூலமும், நவீன அறுவடை எந்திரங்களைப் பயன்படுத்தியும் தேயிலை கொழுந்துகளை தீவிரமாக அறுவடை செய்து வருகின்றனர். பல மாத வறட்சிக்கு பிறகு தேயிலை விளைச்சல் அதிகரித்துள்ளதால், கோத்தகிரி பகுதி தேயிலை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் முகத்தில் மகிழ்ச்சி அலை வீசுகிறது.

X