கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்க வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

கூட்டுறவு சங்கங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள பயிர் கடனை உடனடியாக வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி பேசினார்கள்.
கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்க வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
Published on

பொள்ளாச்சி

கூட்டுறவு சங்கங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள பயிர் கடனை உடனடியாக வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி பேசினார்கள்.

விவசாயிகளுக்கு பயிர்கடன்

பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய உழவர் மையத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு குறைகளை தெரிவித்தனர். அப்போது விவசாயிகள் கூறியதாவது:-

சிறு, குறு விவசாயிகள் என்று பார்க்காமல் அனைத்து விவசாயி பணிகளுக்கும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை அனுமதிக்க வேண்டும். மேலும் கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் வழங்காமல் நிறுத்தி வைத்து உள்ளனர்.

இதுகுறித்து உரிய ஆய்வு செய்து உடனடியாக விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தில் முறைகேடுகள் ஏற்பட்டதாக கூறி, புதிதாக விவசாயிகளை இணைப்பதில்லை. எனவே அந்த திட்டத்தில் மீண்டும் விவசாயிகளை இணைக்க வேண்டும் என்றனர்.

தேவம்பாடிவலசு குளம்

கூட்டத்தில் கோவை மாவட்ட கலெக்டருக்கு, வடக்கு வேளாண்மை துறை உதவி இயக்குனர் ஷீலா பூசலட்சுமி மூலம் விவசாயிகள் மனு அனுப்பி வைத்தனர்.

தேவம்பாடி குளத்து பாசன விவசாயிகள் சங்கத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தேவம்பாடிவலசில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 64 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. கிருஷ்ணா குளத்தின் உபரிநீரை தேவம் பாடிவலசு குளத்திற்கு கொண்டு வருவதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை தொடர்ந்து குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர ஆய்வு பணிக்கு கடந்த 2018-ம் ஆண்டு ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பணிகள் நடைபெறவில்லை.

தற்போது பருவமழை நன்கு பெய்து உள்ளதால் கோரையாற்றில் வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. எனவே உடனடியாக ஆய்வு செய்து வீணாகும் நீரை 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தேவம்பாடிவலசு குளத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்ட உள்ளது.

கூட்டத்தில் அட்மா திட்ட தலைவர் சக்திவேல், திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம், விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவன தலைவர் பத்மநாபன் மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com