கோவில் நிலத்தில் உள்ள உழவர் சந்தைக்கு 'சீல்' வைக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

கோவில் நிலத்தில் சட்டவிரோதமாக அமைந்துள்ள உழவர் சந்தைக்கு சீல் வைக்கும்படி சேலம் போலீஸ் சூப்பிரண்டுக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கோவில் நிலத்தில் உள்ள உழவர் சந்தைக்கு 'சீல்' வைக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
Published on

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், திருத்தொண்டர்கள் சபையின் தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

சேலம் மாவட்டம், எடப்பாடியில் அமைந்துள்ள அருள்மிகு பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு, ஏராளமான நிலம் உள்ளது. எடப்பாடி பஸ் நிலையம் அருகே இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், உழவர் சந்தை அமைக்க கடந்த 2010-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது.

இதற்காக 17 ஆயிரத்து 835 சதுர அடி நிலத்தை விற்பனைக்கு கேட்டு இந்து சமய அறநிலையித்துறைக்கு, வேளாண் துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. இந்த கோரிக்கையை பரிசீலித்த அறநிலையத்துறை, நிலத்துக்கு அப்போது 93 லட்சத்து 9 ஆயிரத்து 870 ரூபாய் என விலை நிர்ணயம் செய்தது.

ஆனா, இந்த தொகைநை செலுத்தாமல், கோவிலுக்கு சொந்தமான அந்த நிலத்தில் அத்துமீறி நுழைந்து கடந்த 2011-ம் ஆண்டு உழவர் சந்தை அமைக்கப்பட்டது. இதற்காக கடந்த 2011-ம் ஆண்டு அடிக்கல் நாட்டு விழா நடந்து. கட்டுமான பணிகளும் தொடங்கப்பட்டன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறநிலையத்துறை அதிகாரிகள் எழுதிய கடிதத்தை வேளாண் துறை அதிகாரிகள் அலட்சியப்படுத்தி விட்டனர். தற்போது வரை அங்கு உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமல்ல கூடுதலாக 1,069 சதுர அடியை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

எனவே, கோவில் நிலத்துக்குள் நுழைந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இந்த வழக்கு ஆவணங்களை படித்து பார்த்ததில், நிலம் கோவிலுக்கு சொந்தமானது. இந்த நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து, உழவர் சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக கட்டுமானங்களும் கட்டப்பட்டுள்ளது என்று நன்கு தெரிகிறது. இந்த உழவர் சந்தை என்பது பொதுமக்கள் நலனுக்காக அமைக்கப்பட்டுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அதற்காக உரிய இழப்பீட்டு தொகையை கோவில் நிர்வாகத்துக்கு வழங்காமல், நிலத்தை அதிகாரிகள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்க முடியாது. அதுவும் கடந்த 2010-ம் ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதுவரை தொகையை வழங்கவில்லை. கடந்த 2020-ம் ஆண்டு, பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவில் செயல் அதிகாரிக்கு, சேலம் வேளாண்துறை இயக்குனர் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், 2010-ம் ஆண்டு நிலத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ.93 லட்சத்து 9 ஆயிரத்து 870- யை வழங்க அரசிடம் ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். ஆனால், இன்று வரை அந்த தொகையை கூட வழங்க வில்லை.

எனவே, இந்த தொகையை செலுத்தும் வரை, உழவர் சந்தையை சேலம் போலீஸ் சூப்பிரண்டு 'சீல்' வைக்க வேண்டும். அங்கு எந்த ஒரு வியாபாரமும் நடைபெறவில்லை என்பதை போலீஸ் சூப்பிரண்டு உறுதி செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற 8-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அன்று உழவர் சந்தைக்கு 'சீல்' வைத்தது குறித்து போலீஸ் சூப்பிரண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com