விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும்

அ.தி.மு.க. ஆட்சி அமைந்தால் மட்டுமே விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும் என திருவாரூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காமராஜ் எம்.எல்.ஏ. பேசினார்.
விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும்
Published on

ஆர்ப்பாட்டம்

குறுவை சாகுபடிக்கு உரிய நீர் பெற்று தராத தமிழக அரசை கண்டித்தும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அலட்சியப்படுத்தும் கர்நாடக அரசை கண்டித்தும், கருகிய குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி நேற்று திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு அ.தி.மு.க. சார்பில் நடந்த நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி ஆணையம்

நானும் விவசாயி தான் என்று பலர் கூறிக் கொள்கின்றனர். ஆனால் உண்மையில் விவசாயி ஒருவர் முதல்-அமைச்சராக உருவானது என்று சொன்னால் அது எடப்பாடி பழனிசாமி தான். காவிரி நடுவர் மன்றம் அமைய காரணமாக இருந்தவர் எம்.ஜி.ஆர். காவிரி நீர் விவகாரத்திற்காக 5 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த ஒரே முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான்.

காவிரி நதிநீர் தீர்ப்பை அரசிதழில் பதிவு செய்து வெளியிட வைத்ததும் ஜெயலலிதா தான். 2018-ம் ஆண்டு காவிரி ஆணையம் அமைக்கப்பட்டது முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தான்.

விவசாயிகளின் பிரச்சினைகள் தீரும்

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தவர் எடப்பாடி பழனிசாமி தான். கடத்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் 3 முறை விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நிவாரணம், இன்சூரன்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது ஒரு எக்டேருக்கு ரூ.13,500 நிவாரணம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்அறிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, 75 ஆயிரம் ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் 610 ஏக்கர் தான் பாதிக்கப்பட்டதாக கணக்கு கூறுவது எந்த விதத்தில் நியாயம்?. அ.தி.மு.க. ஆட்சி அமைந்தால் மட்டுமே விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு செயலாளர்கள் சிவா ராஜமாணிக்கம், கோபால், முன்னாள் எம்.எல்.ஏ. பாப்பா சுப்பிரமணியன், விவசாய சங்க பிரதிநிதிகள் பி.ஆர்.பாண்டியன், பயிரி கிருஷ்ணமணி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வாசுகிராம், மாவட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண் பாசறை செயலாளர் கலியபெருமாள், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சின்னராஜ் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com