விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் தென்பகுதி விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
Published on

தூத்துக்குடி,

தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, சாத்தான்குளத்தில் தென்பகுதி விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி

தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் தென்பகுதி விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குளங்களை தூர்வார கோரிக்கை

இந்த ஆர்ப்பாட்டத்தில், முதல்-அமைச்சர் விஜய் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டவாறு விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், சாத்தான்குளம் வட்டாரத்தின் முக்கிய வாழ்வாதார குளங்களாக விளங்கிவரும் வைரவம் தருவை மற்றும் புத்தன் தருவை ஆகிய குளங்களை தூர்வாரி, அங்கு ஆக்கிரமித்துள்ள முள்செடிகளை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

நிரந்தர கால்வாயாக மாற்ற நடவடிக்கை

இந்த குளங்களுக்கு முறையாக கரையமைத்து, சடையனேரி கால்வாய் மூலம் ஆண்டுதோறும் தடையின்றி தண்ணீர் வரும் வகையில் அதனை நிரந்தர கால்வாயாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்டன.

தென்பகுதி விவசாய சங்க தலைவர் லூர்து மணி தலைமை வகித்த இந்த ஆர்ப்பாட்டத்தில், துணை தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்று பேசினார். சங்க பொதுச்செயலாளர் சரவணன், ஜெகதீஷ், முன்னாள் ஒன்றிய குழ தலைவர் ஜெயராணி மற்றும் சங்க ஒருங்கிணைப்பாளர் ஜெப சீயோன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திச் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் சங்க ஒருங்கிணைப்பாளர் கனகராஜ், பொருளாளர் செல்வகுமார், செயற்குழு உறுப்பினர்கள் அன்னகணேசன், ஜெயசேகரன், தோப்பூர் அமலன், நெடுங்குளம் முத்து, ஜான்சன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் ஞானமுத்து, பாண்டியராஜ், பால்துரை, ரவிச்சந்திரன், முத்துவேல், சித்திரைகனி, விஜயராஜன், மாடசாமி, இன்பராஜ் உள்பட திரளான உள்ளூர் விவசாயிகள் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர். நிறைவில் தென்பகுதி விவசாய சங்க செயலாளர் பெரியசாமி நன்றி கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com