

மத்திய அரசு உதவித்தொகை பெறும் விவசாயிகள் தபால் வங்கிக்கணக்கு தொடங்க வேண்டும் என தபால்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
வங்கிக்கணக்கு
மதுரை கோட்ட தபால்துறை முதுநிலை கண்காணிப்பாளர் கல்யாண வரதராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள், தங்களது அடுத்த தவணையை பெறுவதற்கு உடனடியாக ஆதார் எண்ணுடன் இணைந்த வங்கிக்கணக்கு தொடங்க வேண்டும். அதாவது அடுத்த வாரம் பெற உள்ள 14-வது தவணையை பெறுவதற்கு ஆதார் எண்ணுடன் கூடிய வங்கிக்கணக்கு அவசியமாகும்.
எனவே விவசாயிகள் அருகில் உள்ள தபால்நிலையம், தபால்காரர்கள் மற்றும் கிராம தபால்காரர்களை தொடர்பு கொண்டு தபால்வங்கி சேவையை பெறலாம். தபால்காரர் மற்றும் கிராம தபால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள செல்போன் மற்றும் பயோமெட்ரிக் கருவி மூலம் ஆதார் மற்றும் செல்போன் எண் பதிவு செய்து விவசாயிகளுக்கு விரல் ரேகை மூலம் உடனடியாக தபால் வங்கிக்கணக்கு தொடங்கப்படும்.
ஆதார் எண்
மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையுடன் இணைந்து கிராமப்புறங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களை விவசாயிகள் பயன்படுத்தி இந்த சேவையை பெறமுடியும். தமிழகத்தில் இந்த திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 17 ஆயிரம் விவசாயிகளும், மதுரை மாவட்டத்தில் 7072 விவசாயிகளும் ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கு இல்லாமல் இருப்பதால் உடனடியாக தபால்வங்கிக்கணக்கு தொடங்க வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வருடத்துக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 3 தவணையாக வழங்கப்படும் இந்த நிதியானது தற்போது 13 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.