

தமிழ்நாட்டில் சிறு, குறு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த 25-ம் தேதி தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது. கூட்டுறவு வங்கிகளில் இருந்து ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது.தமிழக அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 5 ஏக்கருக்கு குறைவாக உள்ள விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே விவசாயிகள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். நெற்றியில் பட்டை நாமம் போட்டு, வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். அதேபோல, சேலம் கோட்டை மைதானத்திலும் ஆர்ப்பட்டம் நடைபெற்றது. நெல்லையில் ஆட்சியர் அலுவலகம் எதிரே விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என கோஷமு எழுப்பினர். விவசாயிகளின் ஆர்ப்பாட்டம் காரணமாக சம்பந்தப்பட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது.
கடன் தொகை ரூ.50,000 வரை இருந்தால் குறு விவசாயிகளுக்கு முழு தள்ளுபடி செய்யப்படும்.
ரூ.50,001 முதல் ரூ.60,000 வரை கடன் இருந்தால் ரூ.40,000 தள்ளுபடி செய்யப்படும்.
ரூ.60,001 முதல் ரூ.70,000 வரை இருந்தால் ரூ.30,000 வரை தள்ளுபடி செய்யப்படும்.
ரூ.70,001 முதல் ரூ.80,000 வரை கடன் பெற்று இருந்தால் ரூ.20,000 வரை தள்ளுபடி செய்யப்படும்.
ரூ.80,001 முதல் ரூ.90,000 வரை கடன் பெற்று இருந்தால் ரூ.10,000 வரை தள்ளுபடி செய்யப்படும்.
ரூ.90,001 முதல் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்று இருந்தால் ரூ.5,000 தள்ளுபடி செய்யப்படும்.