கோடைகால சாகுபடியை தொடங்கும் விவசாயிகள்

சொட்டு நீர் பாசன முறையில் கோடைகால சாகுபடியை விவசாயிகள் தொடங்கி வருகின்றனர். இதையொட்டி விளைநிலங்களை தயார்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கோடைகால சாகுபடியை தொடங்கும் விவசாயிகள்
Published on

ஊட்டி

சொட்டு நீர் பாசன முறையில் கோடைகால சாகுபடியை விவசாயிகள் தொடங்கி வருகின்றனர். இதையொட்டி விளைநிலங்களை தயார்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மலைக்காய்கறிகள்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை உறைபனி தாக்கம் இருந்தது. குறிப்பாக ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் குறைந்தபட்சமாக ஒரு டிகிரி செல்சியசும், அவலாஞ்சி பகுதியில் மைனஸ் 5 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவானது. இதனால் தேயிலை மற்றும் மலைக்காய்கறி விவசாயம் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் பனிக்காலம் முடிந்து கோடைகாலம் ஆரம்பித்து விட்டது. மேலும் இதமான காலநிலை உள்ளதால், அதை பயன்படுத்தி ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாய பணிகள் தீவிரமடைந்து உள்ளன.

முதல் போக சாகுபடி

இங்கு ஆண்டுதோறும் 3 போக சாகுபடி நடைபெற்று வருகிறது. அதன்படி முதல் போக சாகுபடிக்கு விளைநிலங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது சாகுபடியை தொடங்கினால்தான் ஜூன் மாதம் அறுவடை செய்ய முடியும். மேலும் கோடை காலத்தை கருத்தில் கொண்டு சொட்டு நீர் பாசன முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் சுமார் 7 ஆயிரத்து 500 ஹெக்டர் பரப்பளவில் மலைக்காய்கறிகள் விளைவிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நிலவிய உறை பனி பொழிவால் காய்கறி விவசாயம் சற்று மந்தமாகி இருந்தது. தற்போது பனிக்காலம் முடிவுக்கு வந்ததால் முத்தோரை பாலாடா, கப்பத்தொரை, கல்லக்கொரை ஆடா, கேத்தி பாலாடா, கொல்லிமலை, தேனாடுகம்பை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தங்களின் நிலங்களை சமன்படுத்தி டிராக்டர்கள் மூலம் நன்கு உழுது விதைப்பு பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

படிமட்ட முறை

இனிவரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் தண்ணீர் பாய்ச்ச வசதியாக தற்காலிக பிளாஸ்டிக் தொட்டிகளை அமைத்து வருகிறோம். மேலும் சிக்கனமாக பயன்படுத்த சொட்டு நீர் பாசனம் மேற்கொள்ளப்டுகிறது. ஏற்கனவே பயிரிட்டுள்ள காய்கறி பயிர்களை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் தண்ணீர் பாய்ச்சும் பணிகளும் நடந்து வருகிறது.

குறிப்பாக நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பதற்காக படிமட்ட முறையில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com