

ஈரோடு
ஈரோட்டில் சாயக்கழிவு பிரச்சினையால் சீல் வைக்கப்பட்ட ஆலைகள் மீண்டும் இயக்கப்பட்டதாக புகார் தெரிவித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாயக்கழிவு வெளியேற்றம்
ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான சாய, சலவை, பிரிண்டிங் பட்டறைகளும், தோல் தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகின்றன. அங்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்றும், சாயக்கழிவுகளை நேரடியாக வெளியேற்றக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால் இந்த உத்தரவை மீறி பல்வேறு சாய, சலவை பட்டறைகளில் இருந்து அருகில் உள்ள நீர்நிலைகளில் சாயக்கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. குறிப்பாக காலிங்கராயன் வாய்க்காலில் சாயக்கழிவுகள் நேரடியாக கலக்கப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக விவசாயிகள் தொடர்ந்து புகார் அளித்து வருகிறார்கள். மேலும் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை.
முற்றுகை
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மொடக்குறிச்சி வி.பி.சிவசுப்பிரமணி எம்.எல்.ஏ. ஈரோடு வெண்டிபாளையம் பகுதியில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது நீண்ட தூரம் குழாய் அமைத்து காலிங்கராயன் வாய்க்காலில் சாயக்கழிவுநீர் வெளியேற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினார்கள். இதில் சாயக்கழிவுநீரை வெளியேற்றிய சுமார் 30 பட்டறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் சீல் வைக்கப்பட்ட சாய பட்டறைகள் மீண்டும் இயக்கப்படுவதாக புகார் தெரிவித்து ஈரோடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
நடவடிக்கை என்ன?
இது குறித்து காலிங்கராயன் பாசன விவசாயிகள் கூறியதாவது:-
ஈரோட்டில் உள்ள நீர்நிலைகளில் சாயக்கழிவுநீரை வெளியேற்றுவது தொடர் கதையாகி வருகிறது. இதுதொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. பெயரளவில் ஒரு சில பட்டறைகளுக்கு சீல் வைக்கப்படுகிறது. ஆனால் அதே பட்டறைகள் மீண்டும் இயக்கப்படுகின்றன.
வெண்டிபாளையம் பகுதியில் குழாய் அமைத்து வெளிப்படையாக சாயக்கழிவுநீர் வெளியேற்றப்பட்டது. இதை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்து உள்ளனர். இதனால் பாசன தண்ணீரில் ரசாயனம் கலந்து மண்ணின் தன்மை பாதிக்கப்படுகிறது. இதனால் விளைச்சல் பாதிக்கப்படுவதுடன், சேற்றில் இறங்கி உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளின் உடல்நலமும் பாதிக்கப்படுகிறது. தற்போது சீல் வைக்கப்பட்ட ஆலைகளும் மீண்டும் செயல்பட தொடங்கி விட்டன. எனவே மீண்டும் வாய்க்காலில் சாயக்கழிவு கலப்பது தொடர்ந்துவிடும். மேலும், எத்தனை சாயப்பட்டறைகள் சீல் வைக்கப்பட்டு உள்ளது, அதன் உரிமையாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன போன்ற எந்தவொரு தகவலையும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வெளியிட மறுக்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.