விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என எஸ்.புதூர் தாட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சரவணன் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
Published on

எஸ்.புதூர், 

விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என எஸ்.புதூர் தாட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சரவணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பல்வேறு திட்டங்கள்

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி பரப்பை அதிகரித்து விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதற்கு தோட்டக்கலை துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

தோட்டக்கலை பயிர்களின் பரப்பு விரிவாக்க திட்டத்தில் வீரிய ஒட்டு காய்கறிகள் சாகுபடிக்கு கத்தரி, தக்காளி, மிளகாய், குழித்தட்டு நாற்றுகளும், மா அடர் நடவு, கொய்யா அடர் நடவு, பலா, நெல்லி, பப்பாளி மற்றும் முந்திரி புதிய தோட்டம் அமைப்பதற்கு ஒட்டு செடிகளும், நேமம் அரசு தோட்டக்கலை பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்டு 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

மானியம்

துல்லிய பண்ணையம், ஒருங்கிணைந்த பண்ணையம், நிலப்போர்வை அமைத்தல், களைப்போர்வை அமைத்தல், மண்புழு உரப்படுக்கை, தேனீ வளர்ப்பு, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு, ஊட்டச்சத்து மேலாண்மைக்கு இடு பொருட்களும் மற்றும் வாழை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வாழை தார் உறைகளும் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. எந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் பவர் டில்லர், பவர் ஸ்பிரேயர் மானிய திட்டத்தில் வழங்கப்படும்.

பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தில் அனைத்து தோட்டக்கலை பயிர்களுக்கும் சொட்டுநீர் பாசனம் அமைத்து தரப்படும். மேலும் துணை நிலை நீர் மேலாண்மைக்கு திட்டத்தின் நீர் ஆதாரங்கள் இல்லாத நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.25 ஆயிரம் மின் மோட்டார் அல்லது டீசல் எந்திரம் வாங்க ரூ.15 ஆயிரம், தண்ணீர் குழாய்கள் அமைக்க ரூ.10 ஆயிரம், தண்ணீர் சேமிப்பு தொட்டி கட்டுவதற்கு ரூ.40 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

பயன்பெறலாம்

இந்த திட்டங்கள் மூலமாக பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்களுடைய நிலவுடைமை ஆவணங்கள், கணினி பட்டா, அடங்கல், ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் எஸ்.புதூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் ஊராட்சிகளான மேலவண்ணாரிருப்பு, மின்னமலைப்பட்டி, கே.புதுப்பட்டி, கரிசல்பட்டி, தர்மபட்டி பகுதி விவசாயிகள், ஆதி திராவிடர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com