வெள்ளரி விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் அவதி

வெள்ளரி விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் அவதி அடைந்துள்ளனர்.
வெள்ளரி விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் அவதி
Published on

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு காணப்படுகின்றன. மறுபுறம் வைகை நீரை நம்பி உள்ள நீர்நிலைகள் பெரும்பாலும் நிறைந்து காணப்படுகின்றன. இதற்கு காரணம் வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக பெய்த தென்மேற்கு பருவமழையில் நிறைந்த வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதுதவிர வடகிழக்கு பருவமழை சமயத்திலும் பாசனத்திற்காகவும் குடிநீருக்காகவும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் ராமநாதபுரம் பெரிய கண்மாய், சக்கரக்கோட்டை கண்மாய் உள்ளிட்ட கண்மாய்களில் தண்ணீர் நிறைந்துள்ளன. குறிப்பாக பெரிய கண்மாய், சக்கரக்கோட்டை கண்மாயில் தண்ணீர் கடல்போல் காட்சி அளிக்கிறது. சக்கரக்கோட்டை கண்மாய் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்து தண்ணீர் வற்றிய பின்னர் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் வெள்ளரி விவசாயம் செய்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு சக்கரக்கோட்டை கண்மாயில் நீர்நிறைந்து காணப்படுவதால் வெள்ளரி விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த வெள்ளரி விவசாயி பாண்டியம்மாள் கூறியதாவது:- பறவைகள் சரணாலயம் என்ற பெயரில் எங்களை ஒரு பகுதிக்கு மேல் செல்ல விடாமல் தடுத்து வந்தனர். ஒரு பகுதியில் மட்டும் வெள்ளரி விவசாயம் செய்து வந்தோம். எங்களிடம் மொத்த வியாபாரிகள் வாங்கிதான் மாவட்டம் முழுவதும் வெள்ளரி விற்பனை செய்வது வழக்கம். இந்த ஆண்டு தண்ணீர் உள்ளதால் வெள்ளரி விவசாயம் செய்ய முடியாமல் போய்விட்டது. கோடை வெயில் காலங்களில் வெள்ளரி விற்பனை செய்து அதில் வரும் வருவாயை வைத்து சமாளித்து வந்தோம். இந்த ஆண்டு எங்களின் நிலை வேதனை அளிப்பதாக உள்ளது என்றார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com