நெற்பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் வேதனை

விக்கிரமங்கலம் அருகே நெற்பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகிறார்கள். வேளாண் அதிகாரிகள் இதனை ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெற்பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் வேதனை
Published on

நெற் பயிர்கள் கருகின

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள ஸ்ரீபுரந்தான், அணைக்குடி, அருள்மொழி உள்ளிட்ட கிராமங்களை சுற்றியுள்ள விவசாயிகள் மோட்டார் பாசனம் மூலம் 250 ஏக்கர் பரப்பளவில் குறுவை பட்டம் சாகுபடி செய்துள்ளனர். இந்தநிலையில் நெல் நடவு செய்து 45 நாட்கள் ஆன நிலையில் நெற்பயிர் சோலைகள் காயத்தொடங்கின. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பல்வேறு மருந்துகளை வாங்கி பயன்படுத்தியும் பயிர் கருகுவதை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதனால் பயிர்கள் முற்றிலும் கருகிய நிலையில் உள்ளது. இதன்காரணமாக குறுவை பட்டம் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

நோய் தாக்குதலா?

நவரை பட்டம் என்று அழைக்கப்படும் குறுவை பட்டத்தில் நடவு செய்யாமல் மழையின் காரணமாக 10 நாட்கள் கழித்து குறுவை சாகுபடி செய்தோம். நகைகளை அடமானம் வைத்து ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து சாகுபடி செய்தோம். நாற்று நடவு செய்து 45 நாட்களான நிலையில் நெற்பயிரில் வளர்ச்சி இல்லாமலும், ஓரிரு நாற்றுகள் மட்டும் பச்சையாகவும், மற்ற பக்கவாட்டில் உள்ள நெற்பயிர்கள் கருகியும் உள்ளன.

நெற்பயிர்கள் கருகிப்போய் உள்ளதற்கு பட்டம் மாறி நடவு செய்ததால் ஏற்பட்ட விளைவுகளா? அல்லது மண்ணின் தன்மைகள் மாறி உள்ளதா? அல்லது ஏதேனும் நோய் தாக்குதலா? என சம்பந்தப்பட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாய நிலங்களையும் வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com