

திருச்சி,
திருச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த ஆண்டு ரூ.10 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் டெல்டா பகுதி விவசாயத்திற்கு மட்டும் ரூ.2 ஆயிரத்து 340 கோடி வழங்கப்பட உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு முதல் கடந்த மாதம் வரை அ.தி.மு.க. ஆட்சியில் 83 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.43 ஆயிரத்து 300 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது. இது வரலாற்று சாதனை ஆகும். இதுவரை எந்த ஆட்சியிலும் இதுபோல் வழங்கப்பட்டது இல்லை.
விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்வதற்கான சாத்தியக்கூறு இல்லை. எல்லா மாவட்டங்களிலும் 86 முதல் 90 சதவீதம் விவசாயிகள் கடன் தொகையை முழுமையாக செலுத்தி வருகிறார்கள். எனவே பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய என்ன இருக்கிறது? கடனை செலுத்திய பின்னர் தகுதியான விவசாயிகளுக்கு மீண்டும் தாமதம் இன்றி கடன் வழங்கப்பட்டு வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலின்போது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்யப்போவதாக ஸ்டண்ட் அடித்தார். அவரால் எப்படி பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய முடியும்? மக்களை குழப்பி வாக்குகளை பெற்று வெற்றிபெறுவதற்காக இப்படி பேசினார்.
ஒரே ரேஷன் கார்டு திட்டம் வந்தாலும் விலையில்லா அரிசி வழங்கப்படும். வெளிமாநிலங்களில் இருந்து இங்கு வருபவர்களுக்கு அவர்களது மாநிலத்தில் உள்ள அளவீடு அரிசி மட்டும் இலவசமாக வழங்கப்படும். மீதி விலைக்கு வழங்கப்படும்.
அதேபோல் தமிழகத்தில் இருந்து அதிகாரிகளோ, பணியாளர்களோ வேறு மாநிலங்களுக்கு சென்றால் அந்த மாநில விதிமுறைப்படி தான் அரிசி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.