

சென்னை,
மேகதாது அணை, பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அனைத்து உழவர் சங்க தலைவர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-
1. கூட்டுறவு பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்!
தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் அனைத்து வகையான விவசாயிகளும் வாங்கி நிலுவையில் உள்ள ரூ.75 ஆயிரம் வரையிலான பயிர்க்கடன் முழுமையாகவும், நிலுவைத்தொகை கூடுதலாக இருந்தால் ரூ.35,000 வரையிலும் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஏற்கனவே அதிகபட்சமாக ரூ.50,000 வரையிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு உழவர் சமூகங்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடமிருந்து எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து தள்ளுபடி செய்யப்படும் கடன் தொகையை அரசு உயர்த்தியிருக்கிறது. ஆனால், இதுவும் உழவர்களின் துயரத்தை தீர்க்காது என்பதே உண்மை.
2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் பயிர்க்கடன் தள்ளுபடி பற்றி வாக்குறுதி அளித்திருந்த த.வெ.க., 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் உழவர்கள் வாங்கிய கடன் முழுமையாகவும், அதற்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் வாங்கிய கடனில் 50 விழுக்காடும் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியிருந்தது. அதற்கு மாறான அறிவிப்புகள் பயனளிக்காது. உழவர்கள் ஐந்தாண்டுகளாக வாங்கிய பயிர்க்கடன்களை கட்ட முடியாமல் உழவர்கள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், 10 மாதங்களுக்கான கடன்களை மட்டும் உச்சவரம்பு வைத்து தள்ளுபடி செய்வது நியாயம் அல்ல. ரிசர்வ் வங்கி மற்றும் நபார்ட் வங்கி விதிகளை காரணம் காட்டி கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய மறுப்பது உணவு படைக்கும் உழவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகவே அமையும்.
மராட்டிய மாநிலத்தில் 55.72 லட்சம் உழவர்கள் வாங்கியிருந்த ரூ.36,585 கோடி மதிப்பிலான பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய அம்மாநில அரசு முடிவு செய்திருப்பதைப் போல தமிழகத்தை ஆளும் த.வெ.க. அரசும் அதன் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் சிறு மற்றும் குறு விவசாயிகள் வாங்கிய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அனைத்து உழவர் சங்கத் தலைவர்களின் கலந்தாய்வு கூட்டம் கோரிக்கை விடுக்கிறது.
2. இரு மாநில உறவுகளை சிதைக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட துடிக்கும் கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு கண்டனம்!
தமிழ்நாட்டின் மிகப்பெரிய பாசன ஆதாரமாக திகழும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் 70 டி.எம்.சி கொள்ளளவுள்ள புதிய அணையை கட்டுவதற்கான முயற்சிகளில் கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்கான பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் ஆகியோரை சந்தித்து பேசியுள்ள அவர், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பை திரித்து கூறி, கொல்லைப்புறம் வழியாக அனுமதி பெற துடிக்கிறார். அவரது இந்த சதி திட்டம் இரு மாநில உறவுகளை கடுமையாக பாதிக்கும் என்பதை நன்றாக அறிந்திருந்தும், இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் நடைபெறவுள்ள கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வெற்றியை கருத்தில் கொண்டு அரசியல் லாபம் தேட அவர் முயன்று வருகிறார். அவரது இந்த முயற்சி கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் பாசன ஆதாரமாகவும், சென்னை உள்ளிட்ட பல நகரங்களிலும், மாவட்டங்களிலும் வாழும் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் திகழ்வது காவிரி ஆறு தான். கடைமடை பாசன மாநிலமான தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் காவிரியில் எந்த கட்டுமானங்களையும் மேற்கொள்ள கூடாது என்பது தான் உச்சநீதிமன்றம் மற்றும் நடுவர் மன்றங்களின் தீர்ப்பு ஆகும். அதை மீறி மேகதாது அணை கட்ட கர்நாடகம் மேற்கொள்ளும் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும்; அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை இக்கூட்டம் கோருகிறது.
3. முல்லை பெரியாறு அணை சிக்கல்: பேச்சு நடத்துவதற்கான கேரள அரசின் அழைப்பை ஏற்க கூடாது!
தமிழ்நாடு, கேரளம் இடையிலான முல்லைப்பெரியாறு அணைச் சிக்கலுக்கு புதிய அணை கட்டுவது மட்டும் தான் தீர்வு என்றும், இது தொடர்பாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் சந்தித்து பேச்சு நடத்த இருப்பதாகவும் கேரள முதல்-மந்திரி வி.டி. சதீசன் அம்மாநில சட்டப்பேரவையில் அறிவித்திருக்கிறார். இது முல்லை பெரியாற்றில் தமிழ்நாட்டின் உரிமைகளை மறுப்பதற்காக செய்யப்படும் நாடகம் ஆகும். இந்த மாயவலையில் தமிழக அரசு சிக்க கூடாது.
முல்லைப்பெரியாறு அணை வலிமையாக இருப்பதாகவும், பேபி அணையை வலுப்படுத்துவதற்கான சில பணிகளை செய்து முடித்த பிறகு அணையின் நீர்மட்டத்தை இப்போதுள்ள 142 அடியிலிருந்து 156 அடியாக உயர்த்தலாம் என்றும் 2006-ம் ஆண்டிலும், 2014-ம் ஆண்டிலும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்பின்னர் நடத்தப்பட்ட பல ஆய்வுகளிலும் அணையின் வலிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 156 அடியாக உயர்த்த ஒத்துழைக்க மறுக்கும் கேரளம், அந்த அணையை தகர்த்து விட்டு, புதிய அணையை கட்டும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது. இதற்காகவே பேச்சு நடத்த கேரளம் அழைத்து விடுத்துள்ளது. அந்த அழைப்பை ஏற்காமல் அணையின் நீர்மட்டத்தை 156 அடியாக உயர்த்துவதற்கான பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்று உழவர்கள் சங்க தலைவர்கள் கூட்டம் வலியுறுத்துகிறது.
4. நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3500 ஆக உயர்த்த வேண்டும்!
இந்தியா முழுவதும் நடப்பாண்டில் சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2461, சாதாரண வகை நெல்லுக்கு ரூ.2441 வீதம் கொள்முதல் விலை நிர்ணயம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டின் கொள்முதல் விலையுடன் ஒப்பிடும் போது ரூ.72 மட்டுமே அதிகம் ஆகும். இந்த இரு வகை நெல்லுக்கும் தமிழக அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகையான முறையே ரூ.156, ரூ.131 சேர்த்தாலும் சன்ன ரக நெல்லுக்கு ரூ. 2617, சாதாரண ரக நெல்லுக்கு ரூ.2572 மட்டுமே கிடைக்கும். ஒரு குவிண்டால் நெல் உற்பத்தி செய்ய ரூ.2300 செலவாகும் நிலையில் இந்த கொள்முதல் விலை போதுமானது அல்ல.
நெல் கொள்முதல் விலையை பொறுத்தவரை கடந்த காலங்களில் மத்திய அரசு, மாநில அரசு ஆகிய இரண்டுமே உழவர்களின் துயரங்களை புரிந்து கொள்வதில்லை. நெல் கொள்முதல் விலையை நிர்ணயிப்பதில் மத்திய அரசு கடைபிடிக்கும் தவறான கணக்கீடு தான் உழவர்களின் துயரத்திற்கு காரணம் ஆகும். இது குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி நியாயமான கொள்முதல் விலை வழங்க வகை செய்ய வேண்டும். அதுவரை இந்த அநீதியை ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்குவதன் மூலம் தமிழக அரசு தான் சரி செய்ய வேண்டும்.
ஒடிசா அரசு ஒரு குவிண்டாலுக்கு ரூ.800, கேரளம் ரூ. 631, ஆந்திரம் மற்றும் தெலுங்கானா ரூ.500 வீதம் ஊக்கத்தொகை வழங்குகின்றன. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக 40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் நிலையில், குவிண்டாலுக்கு ரூ.3,500 கொள்முதல் விலை வழங்க அரசின் சார்பில் ரூ.1059 ஊக்கத்தொகை வழங்க வேண்டும். கடந்த ஆண்டில் குவிண்டாலுக்கு ரூ.131 வீதம் ஊக்கத்தொகை வழங்க ரூ.524 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்தத் தொகை போக ஆண்டுக்கு ரூ.3,672 கோடி மட்டும் தான் கூடுதலாக செலவாகும். எனவே, உழவர்களுக்கு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 கொள்முதல் விலை கிடைக்க வசதியாக ஊக்கத்தொகையை ரூ.1,059 ஆக தமிழ்நாடு அரசு உயர்த்தி வழங்க வேண்டும்.
5. நெல் கொள்முதல் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்; கொள்முதல் நிலையங்களில் கையூட்டு வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்!
தமிழ்நாட்டில் நெல்லை நடவு செய்து அறுவடை செய்வதற்காக படும் பாடுகளை விட, அதை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்கு பெரும் துயரங்களை சந்திக்க வேண்டியுள்ளது. கடந்த ஆண்டு கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்வதில் ஏற்பட்ட தாமதத்தால் பல லட்சம் குவிண்டால் நெல் மழையில் நனைந்து சேதமடைந்தது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாத்து வைக்க கிடங்கு வசதிகள் இல்லாதது தான் இதற்கு காரணம். இந்த நிலைக்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள 302 கிடங்குகள் தவிர, புதிதாக 300 கிடங்குகள் கட்டப்பட வேண்டும் என்று அரசை இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது.
அதேபோல், நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ மூட்டைக்கு ரூ.60, 2 கிலோ நெல் என குவிண்டாலுக்கு ரூ.275 மதிப்புள்ள கையூட்டு வசூலிக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் தமிழக அரசை அனைத்து உழவர் சங்கத் தலைவர்கள் கூட்டம் வேண்டுகிறது.
6. கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.4500 ஆக உயர்த்த வேண்டும்!
தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் 9.50%க்கும் குறைவான சர்க்கரைச்சத்து கொண்ட கரும்புகளுக்கு டன்னுக்கு ரூ.3383 மட்டுமே கொள்முதல் விலையாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நடப்பாண்டில் கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.92 மட்டுமே உயர்த்தப்பட்டிருப்பது போதுமானது அல்ல. ஒரு டன் கரும்பு உற்பத்தி செய்வதற்கு ரூ.3,300 வரை செலவாகும் நிலையில், அதனுடன் 50% இலாபம் மற்றும் போக்குவரத்து செலவு சேர்த்து டன்னுக்கு ரூ.5000 வழங்க வேண்டும் என்பது தான் உழவர்களின் கோரிக்கை. மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து கரும்புக்கு டன்னுக்கு ரூ.5000 கொள்முதல் விலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரும்புக்கு டன்னுக்கு ரூ.5000 கொள்முதல் விலையை உடனடியாக வழங்க முடியாத சூழல் இருந்தால், நடப்பாண்டில் முதல் கட்டமாக 4500 ரூபாயாவது கொள்முதல் விலை வழங்கப்பட வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளை இக்கலந்தாய்வுல் கூட்டம் கேட்டு கொள்கிறது.
7. காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களுக்கும் கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும்!
தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக, வெங்காயம், தக்காளி, வெண்டைக்காய் போன்ற காய்கறிகளின் விலை விண்ணை தொடும் அளவுக்கு உயர்வதும், அடுத்த சில நாட்களில் கிலோ ஒரு ரூபாய்க்கு கூட தக்காளி, வெண்டைக்காய் போன்றவற்றை வாங்க ஆளில்லாத நிலையும் ஏற்படுகிறது. இந்த அவலநிலைக்கு காரணம் வேளாண் விளைபொருட்களுக்கு கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படாததுதான். அண்டை மாநிலமான கேரளத்தில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அனைத்து விளைபொருட்களுக்கும் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் அதேபோல், கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பபட்டால் தான் உழவர்களைக் காக்க முடியும். உழவர்கள் அரும்பாடுபட்டு விளைவித்த விளைபொருட்கள் வீணாவதைத் தடுக்க அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் கொள்முதல் விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று புதிதாக பொறுப்பெற்றுள்ள த.வெ.க. அரசை உழவர் சங்க தலைவர்கள் கூட்டம் வலியுறுத்துகிறது.
8. பேரிடர்களால் சேதமடையும் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நிலையான, நியாயமான கொள்கையை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும்!
பேரிடர் காலங்களால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு தமிழக அரசால் அறிவிக்கப்படும் நிவாரண உதவி என்பது, உழவர்களுக்கு பேரிடரால் ஏற்படும் வேதனையைவிட அதிக வேதனை தருவதாக உள்ளது. எடுத்துக்காட்டாக, கடந்த ஆண்டு தாக்கிய டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று உழவர்கள் கோரியிருந்த நிலையில், தமிழக அரசு ரூ.8,000 மட்டுமே இழப்பீடாக அறிவித்தது. இந்த தொகை போதுமானதல்ல.
இனிவரும் காலங்களில் வறட்சி, புயல், மழை வெள்ளம் போன்றவற்றால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கும் வகையில், தனிக்கொள்கை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அதன்படி, பாதிக்கப்படும் பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு நெல்லுக்கு ரூ.40000, கரும்புக்கு ரூ.1.20 லட்சம், நிலக்கடலைக்கு ரூ.35000, பிற பண பயிர்களுக்கு ரூ.1.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வகை செய்யப்பட வேண்டும்.
அதேபோல், ஒரு குறிப்பிட்ட பகுதியில் குறிப்பிட்ட அளவுக்கும் கூடுதலாக பாதிப்பு ஏற்பட்டிருந்தால் தான் இழப்பீடு வழங்கப்படும் என்ற விதியை தளர்த்தி, ஒரு ஏக்கரில் பயிர் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட, அதற்கு உரிய இழப்பீடு வழங்க அரசு வகை செய்ய வேண்டும் என இந்தக் கூட்டம் கோருகிறது.
9. அண்டை மாநிலங்களைப் போல தமிழ்நாட்டில் உழவர்களுக்கு இடுபொருள் மானியமாக ஏக்கருக்கு ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும்!
உழவுத் தொழிலை லாபகரமானதாக மாற்றினால் மட்டுமே தமிழ்நாட்டில் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். இந்த இலக்கை எட்டுவதற்காக உழவு தொழிலுக்கான இடுபொருட்கள் அனைத்தையும் இலவசமாக வழங்கவேண்டும் என்பதே உழவர்களின் கோரிக்கையாகும். உழவர்களின் இடுபொருள் செலவில் ஒரு பகுதியை ஏற்றுக்கொள்ளும் நோக்குடன், மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.6000 மூலதன மானியமாக வழங்கி வருகிறது. ஆனால், இது போதுமானது அல்ல. தெலங்கானத்தில் ஒரு ஏக்கருக்கு ரூ.12 ஆயிரம் வீதம் இடுபொருள் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல், தமிழ்நாட்டிலும் இடுபொருள் மானியமாக ஒரு ஏக்கருக்கு ரூ.12,000 வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இந்தக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
10. திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா பகுதியில் செய்யாறு சிப்காட் விரிவாக்கத்தை கைவிட வேண்டும்!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டையை விரிவாக்குவதற்காக மேல்மா, தேத்துறை, இளநீர்குன்றம், குறும்பூர், நர்மாபள்ளம், அத்தி, வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்களில் உள்ள 3,000 ஏக்கர் நிலங்களை பறிக்க தமிழக அரசு முயன்று வருகிறது. இதை எதிர்த்து, அப்பகுதியை சேர்ந்த உழவர்கள் ஆயிரம் நாட்களை கடந்து தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு தமிழக அரசு செயல்பட வேண்டும்.
வேளாண்மையை அழித்து தொழில் திட்டங்களை செயல்படுத்துவதை ஒரு காலத்திலும் ஏற்க முடியாது என்பதுதான் மக்களின் நிலைப்பாடு ஆகும். மக்களின் இந்த உணர்வுகளை புரிந்து கொண்டு, செய்யாறு சிப்காட் விரிவாக்கம் செய்யும் முந்தைய அரசின் திட்டத்தை த.வெ.க. அரசு கைவிட வேண்டும் என்று அனைத்து உழவர் சங்கத் தலைவர்கள் கூட்டம் கோருகிறது.
11. தொழில் வணிக திட்டங்களுக்காக வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப் படாது என்பதை கொள்கை முடிவாக அரசு அறிவிக்க வேண்டும்!
தமிழ்நாட்டில் வேளாண் சாகுபடி பரப்பை அதிகரிக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ள நிலையில், அதற்கு மாறாக வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 45,000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி, நில வங்கி அமைக்கும் முயற்சிகளில் முந்தைய அரசு ஈடுபட்டது. தொழில் மற்றும் வணிக திட்டங்களுக்காக வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, பலி கொடுக்கப்படுவதை உழவர் அமைப்புகள் ஒரு போதும் அனுமதிக்காது.
நாட்டின் வளர்ச்சிக்கு தொழில் திட்டங்கள் தேவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதற்காக விளைநிலங்கள் பறிக்கப்படுவது நியாயமல்ல. எனவே, தொழில் திட்டங்கள், வணிக திட்டங்கள், உட்கட்டமைப்பு வசதி திட்டங்கள் போன்றவற்றுக்காக இனி வேளாண் விளைநிலங்கள் ஒருபோதும் கையகப்படுத்தப்படாது என்பதை கொள்கை முடிவாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என்று அனைத்து உழவர் சங்கத் தலைவர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
12. காவிரி & கோதாவரி இணைப்புத் திட்டப் பணிகளை விரைவுபடுத்த மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்!
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரிப் பாசன மாவட்டங்களின் நீர் ஆதாரமாகத் திகழும் காவிரி ஆற்றுப் பிரச்சினைக்கு இன்றுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை. இந்த நிலையில், காவிரி & கோதாவரி இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு 200 டிஎம்சிக்கும் கூடுதலாக தண்ணீர் கிடைக்கும்.
ஆனால் ரூ.89,000 கோடி செலவிலான இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, ஒதிசா, மராட்டியம், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களுடன் பலகட்ட பேச்சு நடத்தியும் கூட இதுவரை கருத்தொற்றுமை ஏற்படாததால் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
கோதாவரி & காவிரி இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், அதன் மூலம் மிகப்பெரிய அளவில் பயனடையப் போவது தமிழ்நாடு தான். அதனால், இந்த திட்டத்தை செயல்படுத்தும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு தான் அழுத்தம் தர வேண்டும். இதற்காக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் தலைமையிலான அனைத்துக் கட்சி மற்றும் உழவர் அமைப்புகளின் குழுவினர் தில்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து காவிரி & கோதாவரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்தும்படி வலியுறுத்த வேண்டும் என்று இந்தக் கூட்டம் வேண்டுகிறது.
13. காவிரி & குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி, பணிகளை விரைவுபடுத்த வேண்டும்!
தஞ்சாவூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களின் வறட்சியைப் போக்குவதற்காக, 70 ஆண்டுக்கு முன் உருவாக்கப்பட்ட காவிரி & குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டாலும் கூட, சொல்லிக்கொள்ளும் படியாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இத்திட்டத்திற்குத் தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் கூட இன்னும் நிறைவடைய வில்லை. இந்தத் திட்டத்திற்கு குறைந்தது ரூ.14,400 கோடி தேவைப்படும் நிலையில் இதுவரை ரூ.364 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால், 262 கி.மீக்கு கால்வாய்கள் வெட்டப்பட வேண்டிய நிலையில் 8 கி.மீக்கு மட்டுமே பணிகள் முடிந்துள்ளன.
2008-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் பணிகள் 18 ஆண்டுகளுக்கு பிறகும் 3% மட்டுமே முடிந்துள்ளன. இதே வேகத்தில் பணிகள் நடந்தால் இன்னும் மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகே இந்தத் திட்டம் சாத்தியமாகும். காவிரி & குண்டாறு திட்டத்தை செயல்படுத்துவதில் இந்த அளவுக்கு அலட்சியம் காட்டப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. உழவர்களின் பாசனத் தேவைக்கும், மக்களின் குடிநீர் தேவைக்கும் மிகப் பெரிய அளவில் பங்களிக்கக் கூடிய காவிரி & குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இக்கூட்டம் கோருகிறது.
14. தமிழ்நாட்டில் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள நீர்ப்பாசன திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்; ஆண்டுக்கு ரூ.25,000 கோடி ஒதுக்க வேண்டும்!
தமிழ்நாட்டின் பாசனப் பரப்பை அதிகரிப்பதற்காக நிலுவையில் உள்ள அனைத்து நீர்ப்பாசனத் திட்டங்களும் விரைந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்பது தான் உழவர்களின் பல்லாண்டு கால கோரிக்கையாக உள்ளது. இது நிறைவேற்றப்பட்டால் தான் உழவர்கள் வாழ்வு நலம் பெறும்.
பவானிசாகர் அணைக்கு 18 டி.எம்.சி நீர் வழங்கும் பாண்டியாறு -& புன்னம்புழா திட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் எஞ்சியுள்ள ஆனைமலையாறு- & நல்லாறு திட்டம், கேரளத்தின் பம்பை ஆறு, அச்சன்கோவில் ஆறு ஆகியவற்றின் தண்ணீரை தமிழ்நாட்டில் உள்ள வைப்பாறுக்கு திருப்பி விடுவதற்கான பம்பை அச்சன்கோவில் - வைப்பாறு திட்டம், ஈரோடு மாவட்டம் அந்தியூர் பாசனப் பகுதிகளின் தேவைக்காக மேட்டூர் அணை வலதுகரை கால்வாய்த் திட்டம், சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியத்தின் தேவைக்காக தோனிமடுவு பாசனத் திட்டம், எண்ணேகோல் புதூரில் இருந்து, தென்பெண்ணை ஆற்று உபரி நீரை, தருமபுரி மாவட்டம் தும்பலஹள்ளி அணைக்கு கொண்டு வருவதற்கான எண்ணேகோல் புதூர் திட்டம், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு படேதலாவ் ஏரிக் கால்வாய்த் திட்டம், பர்கூர் பகுதிக்கு பாளேகுளி ஏரிக் கால்வாய் ஆகிய திட்டங்களை தமிழக அரசு போர்க்கால வேகத்தில் செயல்படுத்த வேண்டும்; இந்த பாசன திட்டங்களை செயல்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ரூ.25,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று உழவர் சங்க தலைவர்கள் கூட்டம் கேட்டு கொள்கிறது.
15. தருமபுரி & காவிரி உபரி நீர் திட்டத்தை நிதிநிலை அறிக்கையில் அறிவித்து நிதி ஒதுக்க வேண்டும்!
தமிழ்நாட்டின் மிகவும் பின்தங்கிய மாவட்டமான தருமபுரி மாவட்டத்தில், வறட்சியை போக்கி வளம் கொழிக்க செய்வதற்கான திட்டம்தான் தருமபுரி & காவிரி உபரிநீர் திட்டம் ஆகும். காவிரி ஆற்றின் உபரிநீரில் 3 டிஎம்சி தண்ணீரைக் கொண்டு வந்து, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 10 அணைகள், 83 ஏரிகள் உள்ளிட்ட 1,230 நீர்நிலைகளில் நிரப்புவதுதான் இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.650 கோடி போதுமானது என மதிப்பிடப்பட்டுள்ளது.
பத்தாண்டுகளாக இந்தத் திட்டத்திற்காக பாட்டாளி மக்கள் கட்சி குரல் கொடுத்து வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று, முந்தைய ஆட்சியின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. கடந்த ஆட்சியில் இத்திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, தருமபுரி மாவட்டம் முழுவதும் அரைநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தத் திட்டத்திற்கு மக்களின் ஆதரவு அதிகம் இருப்பதையே இந்த போராட்டங்களில் வெற்றி காட்டுகிறது. இதை உணர்ந்து அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்தை சேர்த்து, நிதி ஒதுக்க வேண்டும் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசை இக்கூட்டம் கோருகிறது.
16. அரியலூர் & சோழர் பாசனத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்!
வறட்சியால் கடுமையாக பாதிக்கப்படும் மாவட்டங்களில் ஒன்றான அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி எனப்படும் சோழகங்கம் ஏரி, செம்பியன்மாதேவி என்று அழைக்கப்படும் கண்டராதித்தம் ஏரி, வேட்டக்குடி பண்மாகேஸ்வரி ஏரி, காமரசவள்ளி ஏரி உள்ளிட்ட 100 ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் அமைந்துள்ள ஏரிகளை அவற்றின் முழுமையான கொள்ளளவை எட்டும் அளவுக்கு தூர்வாரி மேம்படுத்துதல், அனைத்து ஏரிகளுக்கும் கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளின் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கான வரத்துகால்வாய்களை ஒழுங்கமைத்தல் உள்ளிட்ட பணிகளை ‘அரியலூர் சோழர் பாசனத்திட்டம்’ என்ற பெயரில் செயல்படுத்த வேண்டும் என்பது தான் உழவர் அமைப்புகளின் கோரிக்கையாகும்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்று, முந்தைய ஆட்சியில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மதிப்பீடுகள் செய்யப்பட்டன. ஆனாலும், இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை. அரியலூர், கடலூர் மாவட்டத்தின் பாசன ஆதாரங்களை மேம்படுத்தும் நோக்கம் கொண்ட அரியலூர் & சோழர் பாசனத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக வெளியிடுவதுடன், அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்ய இக்கூட்டம் கோருகிறது.
17. தமிழ்நாட்டில் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகளை மீட்க தனி வாரியம் அமைக்க வேண்டும்!
தமிழ்நாட்டில் சில பத்தாண்டுகளுக்கு முன் 41,127 ஏரிகள் இருந்தன. அவற்றின் மொத்த கொள்ளவு 347 டிஎம்சி ஆகும். தமிழ்நாட்டில் உள்ள மேட்டூர் அணை, வைகை அணை, பவானி அணை, அமராவதி அணை, சாத்தனூர் அணை உள்ளிட்ட அனைத்து அணைகளின் ஒட்டுமொத்த கொள்ளளவைவிட, ஏரிகளின் தண்ணீர் கொள்ளளவு மிகவும் அதிகம் ஆகும்.
ஆனால், தமிழ்நாட்டில் இருந்த ஏரிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள் காணாமல் போய்விட்டன. இப்போது பயன்பாட்டில் உள்ள சுமார் 27,000 ஏரிகளும் முறையாக பராமரிக்கப்படாததால், அவற்றின் கொள்ளளவும் பெருமளவில் குறைந்துவிட்டது. தமிழ்நாட்டில் தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து ஏரிகள் மற்றும் குளங்களையும் தூர்வாரி மேம்படுத்தவும், ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகளில், எவற்றை எல்லாம் மீட்க முடியுமோ, அவற்றை மீட்டெடுக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
18. காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் மணல் குவாரிகளை மூடி, தடுப்பணைகளை கட்ட வேண்டும்!
காவிரி பாசன மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் நோக்கு-டன், குறைந்தது 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை அமைக்க வேண்டும் என்பது தான் உழவர்களின் கோரிக்கை ஆகும். ஆனால், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தடுப்பணைகளை அமைப்பதற்கு பதிலாக, மணல் குவாரிகளை தமிழக அரசு அமைத்திருக்கிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைவது மட்டுமின்றி, பல இடங்களில் கடல் நீரும் ஊருக்குள் ஊடுருவி நிலத்தடி நீரை பாழ்படுத்தும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
கொள்ளிடம் ஆற்றில் உயர்மட்டப் பாலத்துடன் கூடிய தடுப்பணைகள் 5 இடங்களில் அமைக்கப்படும் என்று கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்டாலும் கூட, இதுவரை செயல்படுத்தப்படவில்லை. காவிரி பாசன மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்தும் வகையிலும், கடல்நீர் உட்புகுவதை தடுக்கும் வகையிலும் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள மணல் குவாரிகளை உடனடியாக மூடவேண்டும். காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் குறைந்தது 10 கி.மீ.க்கு ஒன்று என்ற அடிப்படையில் தடுப்பணைகளை கட்ட வேண்டும் என இக்கூட்டம் கோருகிறது.
19. பாலாற்றின் குறுக்கே குறைந்தது 25 இடங்களில் தடுப்பணைகளை கட்ட வேண்டும்!
கர்நாடகத்தில் உருவாகும் பாலாறு, தமிழ்நாட்டில் தான் அதிக தூரம் பயணிக்கிறது. ஆனால், தமிழ்நாட்டிற்கு பாலாற்றுநீர் வருவதே இல்லை. அதற்குக் காரணம், பாலாறு 93 கிலோ மீட்டர் பயணிக்கும் கர்நாடகத்தில் 3 தடுப்பணைகளும், 33 கி.மீ. பயணிக்கும் ஆந்திராவில் 22 தடுப்பணைகளும் கட்டப்பட்டுள்ளன. பெருமழை காலங்களில் இந்த இரு மாநிலங்களின் தடுப்பணைகளை தாண்டி பாலாற்றில் தண்ணீர் வந்தாலும், அது யாருக்கும் பயனளிக்காமல் வீணாக கடலில் சென்று கலக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 200 டிஎம்சிக்கும் கூடுதலான நீர் பாலாற்றின் வழியாகச் சென்று வீணாக கடலில் கலந்திருப்பது பெரும் சோகமாகும்.
தமிழ்நாட்டில் 222 கி.மீ. தொலைவு பயணிக்கும் பாலாற்றின் குறுக்கே 2 தடுப்பணைகள் மட்டுமே கட்டப்பட்டிருந்தன. பா.ம.க.வின் தொடர் வலியுறுத்தல் காரணமாக, அண்மையில் வாயலூர், வல்லிபுரம் ஆகிய இடங்களில் இரு தடுப்பணைகள் கட்டப்பட்டிருக்கின்றன. இதனால் அப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக அதிகரித்திருக்கிறது. இதேபோல், பாலாற்றின் குறுக்கே குறைந்தது 25 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும்; அதன் மூலம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்க வேண்டும் என்று உழவர் சங்க தலைவர்கள் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
20. காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை விரிவுபடுத்த வேண்டும்!
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையை ஒட்டிய வங்காள விரிகுடா கடலில் 4 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க இந்துஸ்தான் எண்ணெய் கண்டுபிடிப்பு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் வேளாண்மையும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படக்கூடாது என்பதால் தான் கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகள் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்கள் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அதனால் இந்த பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த முடியாது என்பதை உணர்ந்து கொண்டு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல எல்லையிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் முயல்வதை மன்னிக்கவே முடியாது. இதேபோல், அரியலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் வேளாண் தொழிலை பாதிக்கக்கூடிய வகையில் புதிய தொழில்களை தொடங்க முயற்சிகள் நடக்கின்றன.
வேளாண்மையை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களில் இருந்து இம்மாவட்டங்களை பாதுகாக்க காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று அரசை இந்த கூட்டம் வலியுறுத்துகிறது.
21. மேகதாது அணை கட்டும் கர்நாடகத்தின் சதித் திட்டத்தை முறியடிக்க வலியுறுத்தி பிலிகுண்டுலு முதல் பூம்புகார் வரை மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் 3 நாள்கள் விழிப்புணர்வு பரப்புரை பயணம் நடத்த முடிவு!
காவிரி நீரை பகிர்ந்து கொள்வதில் 130 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்து வரும் கர்நாடகம், இப்போது காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக்கும் நோக்குடன் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காமல் தடுக்க காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.கே.சிவக்குமார் மற்ற பணிகளையெல்லாம் மறந்து விட்டு மேகதாது அணை கட்டுவதையே தமது முதல் நடவடிக்கையாக கருதி செயல்படுகிறார்.
காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு செய்தவை அனைத்துமே துரோகங்கள் தான். தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையிலான நீர்ப்பகிர்வு பிரச்சினை 1892-ம் ஆண்டுக்கு முன்பாக தொடங்கியது. முதல்மடை பாசன மாநிலமான அன்றைய மைசூர் மாகாணம், கடைமடை பாசன மாநிலமான சென்னை மாகாணத்தின் அனுமதியின்றி பாசன பரப்பை அதிகரிக்க தொடங்கியதன் காரணமாக தான் இரு மாநிலங்களுக்கும் இடையே காவிரி பிரச்சினை ஏற்பட்டது. அதற்கு தீர்வு காணும் நோக்குடன் 1892-ம் ஆண்டில் காவிரி நீர்ப்பகிர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
ஆனால், கர்நாடகம் அதையும் மதிக்காமல் 1911-ம் ஆண்டில் கிருஷ்ணராஜசாகர் அணையை கட்டும் பணியை தொடங்கியதால் இரு மாநிலங்களுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. அதற்கான தீர்வாக 1924-ம் ஆண்டில் இரண்டாம் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு பிறகு அந்த ஒப்பந்தத்தையும் புதுப்பிக்க மறுத்து விட்ட கர்நாடகம், காவிரி மற்றும் துணை ஆறுகளுக்கு குறுக்கே ஹாரங்கி, ஹேமாவதி, கபினி, சுவர்ணவதி ஆகிய 4 அணைகளை கட்டியது. இவற்றில் சுவர்ணவதி தவிர மீதமுள்ள 4 அணைகளின் மொத்த கொள்ளளவு 114.57 டி.எம்.சி ஆகும்.
இப்படியாக கடந்த 130 ஆண்டுகளாகவே தமிழ்நாட்டிற்கு காவிரியில் உரிய தண்ணீர் தர மறுப்பது, சரியாக 50 ஆண்டு கால இடைவெளியில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே புதிய அணைகளை கட்டுவது ஆகியவற்றையே கர்நாடக அரசு வாடிக்கையாக வைத்திருக்கிறது. 1920 களிலும், 1970 களிலும் அணைகளை கட்டிய கர்நாடகம் இப்போது காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணையை கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது.
மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான அனுமதியை கொல்லைப்புறம் வழியாக பெற்ற கர்நாடக அரசு, இப்போது மேகதாது அணை கட்டுவதற்கான அனுமதியையும் அதே வழியில் பெற்று தங்களின் பெருங்கனவை நனவாக்கி விட துடிக்கிறது.
கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக பொறுப்பேற்றிருக்கும் டி.கே.சிவக்குமார், காவிரி பாசனத்தை நம்பி இருக்கும் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர். கடந்த தேர்தலில் கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க மாண்டியா பகுதியில் கிடைத்த வெற்றி தான் காரணம் என்பதால், மீண்டும் வெற்றியை உறுதி செய்வதற்காக மேகதாது அணை விவகாரத்தை மீண்டும், மீண்டும் கையிலெடுத்து வருகிறார்.
குறைந்தபட்சம் அணை கட்டுவதற்கான அனுமதியை மட்டும் பெற்று விட்டால், அதை பயன்படுத்தி கொண்டு தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்பது கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரின் அரசியல் கணக்கு ஆகும். கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே இருக்கும் நிலையில், மேகதாது அணைக்கு அனுமதி பெறும் நடவடிக்கைகளை கர்நாடகம் தீவிரப்படுத்த கூடும்.
மேகதாது அணை விவகாரத்தில் நியாயமும், சட்டமும், நீதிமன்ற தீர்ப்புகளும் தமிழ்நாட்டுக்கு சாதகமாக தான் இருக்கின்றன என்றாலும், 1920ஆம் ஆண்டுகள் மற்றும் 1970ஆம் ஆண்டுகளில் அனுபவங்களை வைத்து பார்க்கும் போது மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி கிடைக்க வாய்ப்பே இல்லை என்று கூறி விட முடியாது. இத்தகைய சூழலில் மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் சதித்திட்டங்களை முறியடிக்க தமிழ்நாடு அரசின் சார்பில் சட்டப்பூர்வமாகவோ, அரசியல் ரீதியாகவோ எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
கர்நாடகத்தில் காவிரி, அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர், ஹாரங்கி, ஹேமாவதி, கபினி ஆகிய நான்கு அணைகளின் மொத்தக் கொள்ளளவு 114.57 டி.எம்.சி ஆகும். 70 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மேகதாது அணை கட்டப்பட்டால், கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் மொத்த கொள்ளளவு 184.57 டி.எம்.சியாக அதிகரித்து விடும். அதன்பின், இப்போது கிடைக்கும் வெள்ள நீர் கூட தமிழ்நாட்டுக்கு கிடைக்காது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், காவிரி டெல்டா பாலைவனமாக மாறிவிடும்.
எனவே, காவிரி விவகாரத்தில் கடந்த 130 ஆண்டுகளாக கர்நாடக அரசு செய்து வரும் துரோகம், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டினால் தமிழகத்திற்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள், மேகதாது அணை கட்டப் படுவதை தடுத்து நிறுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு, குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாட்டிற்குள் காவிரி ஆறு நுழையும் எல்லை பகுதியாக பிலிகுண்டுலுவில் தொடங்கி காவிரி ஆறு கடலில் கலக்கும் பூம்புகார் வரை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் விழ்ப்புணர்வு பரப்புரை பயணம் மேற்கொள்வதென இந்தக் கலந்தாய்வுக் கூட்டம் தீர்மானிக்கிறது.
வரும் ஜூலை மாதம் 2-ம் தேதி பிலிகுண்டுலுவில் தொடங்கும் இந்த பிரசாரம் பயணம் ஜூலை 4-ம் தேதி பூம்புகாரில் நிறைவடையும். இந்த பிரசார பயணத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள உழவர் அமைப்புகளின் நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்பது என்றும் அனைத்து உழவர் சங்க தலைவர்கள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் ஒரு மனதாக தீர்மானித்திருக்கிறது.