பொங்கல் பரிசு தொகுப்புக்கு செங்கரும்பை அரசு கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

வருகிற 8-ந் தேதி முதல் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் பொங்கல் தொகுப்பு அரசு வழங்க உள்ளது.
திருச்சி,
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவுகளில் செங்கரும்புகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது, இவை அறுவடைக்கு தயார்நிலையில் உள்ளன. இந்த நிலையில் தமிழக அரசு பொது வினியோகத் திட்டத்தின் கீழ், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட்டு வந்தது.
இதற்காக, இப்பகுதி விவசாயிகளிடமிருந்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் கரும்பு கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. கடந்த ஆண்டுகளில் டிசம்பர் 15-ந் தேதிக்குள் கரும்பு கொள்முதல் செய்ய விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கடந்த 10 நாட்களுக்கு மேலாக விவசாயிகளின் பெயர் பட்டியலை அரசு பெற்றிருந்தும், இதுவரை எந்த கொள்முதல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வருகிற 8-ந் தேதி முதல் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் பொங்கல் தொகுப்பு அரசு வழங்க உள்ளது. கால அவகாசம் மிகக் குறைவாக இருப்பதால் கரும்பு விவசாயிகள் அரசு செங்கரும்பை கொள்முதல் செய்யுமா? செய்யாதா? என்ற குழப்பத்திலும், கவலையிலும் ஆழ்ந்துள்ளனர். கரும்பு கொள்முதல் தாமதமானால், ஏக்கருக்கு ரூ.1½ லட்சம் வரை நஷ்டம் ஏற்படும் என தெரிவித்த விவசாயிகள், தமிழக அரசு உடனடியாக கரும்பை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.






