நெல் கொள்முதல் நிலைய ஊழல்களை தடுக்காத திமுகவை உழவர்கள் மன்னிக்க மாட்டார்கள் - அன்புமணி ராமதாஸ்

நெல் கொள்முதல் நிலைய ஊழல்களை தடுத்து நிறுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டில் குறுவை பருவ நெல் கொள்முதல் வழக்கத்தை விட ஒரு மாதம் முன்கூட்டியே தொடங்கியுள்ள நிலையில், நெல் கொள்முதல் நிலையங்களில் தலைவிரித்தாடும் ஊழல்களால் உழவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நெல் கொள்முதல் விலையை உயர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு, உழவர்களை கசக்கிப் பிழியும் கையூட்டு கலாசாரத்தை மட்டும் ஊக்குவித்து வருவது கண்டிக்கத்தக்கது ஆகும்.

காவிரி பாசன மாவட்டங்களில் இம்முறை முன்கூட்டியே குறுவை சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனால், அறுவடையும் முன்கூட்டியே தொடங்கியதால், வழக்கமாக அக்டோபர் மாதம் 1-ம் தேதி தொடங்கும் நெல் கொள்முதல் இம்முறை செப்டம்பர் மாதமே தொடங்கியிருக்கிறது. 2024-ம் ஆண்டில் சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,405க்கும், சன்ன ரக நெல் ரூ.2,450க்கும் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டில் ரூ.95 உயர்த்தப்பட்டு, முறையே ரூ.2,500, ரூ.2,545 வீதம் கொள்முதல் செய்யப்படும் போதிலும், அதனால் உழவர்கள் மகிழ்ச்சியடையவில்லை. காரணம், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இரக்கமே இல்லாமல் உழவர்களிடமிருந்து கட்டாயமாக கையூட்டு பெறப்படுவதுதான்.

நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் 40 கிலோ மூட்டையாக கட்டித்தான் எடை வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு மூட்டைக்கும் ரூ.60 வீதம் கையூட்டு வாங்கும் பணியாளர்கள், மூட்டைக்கு 2 கிலோ நெல்லை குறைத்து கணக்கு காட்டுகின்றனர். அதனால், ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.150 வீதம் கையூட்டும், ரூ.125 மதிப்புள்ள 5 கிலோ நெல்லையும் உழவர்கள் வழங்க வேண்டியுள்ளது.

தமிழக அரசால் கொள்முதல் செய்யப்படும் சாதாரண ரக நெல்லுக்கு மத்திய அரசு ரூ.2,369 விலை வழங்குகிறது. அத்துடன் தமிழக அரசு ரூ.131 மட்டும் ஊக்கத்தொகையாக வழங்குகிறது. ஆனால், தமிழக அரசு பணியாளர்கள் ஒரு குவிண்டாலுக்கு ரூ.275 வீதம் கையூட்டாக வசூலித்துக் கொள்கின்றனர் என்று உழவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது தமிழக அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகையை விட இரு மடங்கு ஆகும். இந்தக் கையூட்டை வழங்காமல் உழவர்களால் நெல்லை விற்பனை செய்ய முடியாது. ஈரப்பதம் அதிகமாக உள்ளது என்பது உள்ளிட்ட காரணங்களைக் காட்டி நெல்லை கொள்முதல் செய்ய பணியாளர்கள் மறுத்து விடுவார்கள். அதனால், கையூட்டு தருவதைத் தவிர உழவர்களுக்கு வேறு வழியே இல்லை.

நெல் கொள்முதல் நிலையங்களில் நடக்கும் ஊழல்களை சகித்துக் கொள்ள முடியாத விவசாயிகளில் பெரும்பகுதியினர் இப்போது நெல்லை தனியார் வணிகர்களிடம் விற்கத் தயாராகி விட்டனர். தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ரூ.2,500-க்கு கொள்முதல் செய்யப்படும் நெல் ரகங்களை தனியார் வணிகர்கள் ரூ.2,300-க்கும் குறைவாகத் தான் கொள்முதல் செய்கின்றனர். ஆனால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வசூலிக்கப்படும் கட்டாயக் கையூட்டைக் கழித்து விட்டுப் பார்த்தால், தனியார் வணிகர்களிடம் நெல்லை விற்பதுதான் லாபமாக இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் ஒரு குவிண்டால் நெல் உற்பத்தி செய்ய ரூ.2,300 செலவாகிறது. உற்பத்திச் செலவுடன் 50% லாபம் சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும் என்ற எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,450 வழங்கப்பட வேண்டும். ஆனால், தமிழக அரசு இப்போதுதான் ரூ.2,500 வழங்குகிறது. மத்திய அரசு நிர்ணயிக்கும் கொள்முதல் விலை குறைவாக இருப்பதால் ஒடிசா, தெலுங்கானா மாநில அரசுகள் ரூ.800 வரை ஊக்கத்தொகை வழங்குகின்றன. ஆனால், வெறும் ரூ.131 மட்டுமே ஊக்கத்தொகை வழங்கும் தமிழக அரசு, அதை விட இரு மடங்கு தொகையை கையூட்டாக பறித்துக் கொள்வதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்களிடம் கையூட்டு வசூலிக்கப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று பலமுறை நான் வலியுறுத்தியிருக்கிறேன். சென்னை ஐகோர்ட்டும் இதை கண்டித்திருக்கிறது. ஆனாலும் கூட நெல் கொள்முதல் நிலைய ஊழல்களை தடுத்து நிறுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உழவர்களிடமிருந்து கையூட்டாகப் பெறப்படும் தொகை உயரதிகாரிகள் வரை பகிர்ந்து கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது. வறுமையில் வாடும் உழவர்களிடமிருந்து கட்டாயக் கையூட்டுப் பெறுவதை விட பெரும் பாவமும், குற்றமும் இருக்க முடியாது. இதைத் தடுக்காமல் ஊக்குவித்து வரும் திராவிட மாடல் அரசை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com