வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு தாமதமானால் சாகும் வரை உண்ணாவிரதம் - டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு தாமதமானால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று பா.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு தாமதமானால் சாகும் வரை உண்ணாவிரதம் - டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
Published on

நிர்வாகிகள் கூட்டம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதற்கு கவுரவ தலைவர் ஜி.கே. மணி தலைமை தாங்கினார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் வரவேற்றார். பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சிறப்புரையாற்றினார்.

சாகும் வரை உண்ணாவிரதம்

கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

வன்னியர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக 1980-ம் ஆண்டு வன்னியர் சங்கத்தை தொடங்கினேன். பின்னர் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ம.க. தொடங்கப்பட்டு, கடந்த 45 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன்.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு தாமதமானால் சாகும் வரை தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு என் உயிரையும் விடுவேன். பா.ம.க. நான் எதிர்பார்த்த அளவுக்கு வளரவில்லை. பா.ம.க.வினர் கட்சியை வளர்க்க வில்லை. அப்படி வளர்த்து இருந்தால் கூட்டணியில் 10 அல்லது 14 இடங்கள் வரைக்கும் வெற்றி பெற்று இருப்போம்.

இன்னும் கூடுதலாக 5 இடங்கள் வரைக்கும் வெற்றி பெற்று இருந்தால் அங்கீகாரம் கிடைத்து இருக்கும்.

இளைஞர்கள் பட்டாளம்

பல இடங்களில் ஆயிரம், இரண்டாயிரம், 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளோம். இது எதனால் என்பதை சிந்திக்க வேண்டும். இன்னும் ஓராண்டில் நாடாளுமன்ற தேர்தலும், அதை தொடர்ந்து சட்டமன்ற தேர்தலும் வரப்போகிறது. நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்?. ஒவ்வொரு தொகுதியிலும் கட்சியில் தீவிரமான 60 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர்.

கட்சியில் இளைஞர்கள் பட்டாளம் கொட்டி கிடக்கிறது. அவர்களை ஒன்றிணைத்து பேசி இருக்கிறீர்களா?, உறுப்பினர் அட்டை வழங்கி இருக்கிறீர்களா?. அவர்களுடன் நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டால் பா.ம.க. வெற்றி பெறும்.

தமிழகத்தில் ஒரு வெற்றிடம் உருவாகியுள்ளது அதை சரி செய்யபோவது பா.ம.க. தான். வருகிற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் நீங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். எந்த கட்சிக்கும் இல்லாத மனிதசக்தி பா.ம.க.வில் தான் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com