வானகரத்தில் எண்ணெய் குடோனில் பயங்கர தீ விபத்து - பல கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்...!

சென்னை வானகரத்தில் உள்ள எண்ணெய் குடோனில் பற்றிய தீயை 5 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
வானகரத்தில் எண்ணெய் குடோனில் பயங்கர தீ விபத்து - பல கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்...!
Published on

சென்னை,

சென்னை மதுரவாயலை அடுத்த வானகரம் சர்வீஸ் சாலை பகுதியில் எண்ணெய் குடோன் உள்ளது. இதன் அருகிலேயே பிளைவுட் குடோன், டைல்ஸ் குடோனில் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோக பொருட்களை சேமித்து வைக்கும் குடோன்கள் உள்ளன.

இந்த நிலையில் நேற்று இரவு எண்ணெய் குடோனில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. இதையடுத்து அருகில் இருந்த 2 பிளைவுட் பர்னிச்சர் குடோன், மற்றும் 6 டைல்ஸ் குடோன் ஆகியவற்றிற்கும் தீ பரவியது.

இங்குள்ள குடோன்களில் வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

இதுகுறித்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து மதுரவாயல், பூந்தமல்லி, விருகம்பாக்கம், கீழ்ப்பாக்கம், எழும்பூர், கே.கே.நகர், ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு தீயணைப்பு நிலையங்களிலிருந்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எண்ணெய் குடோன் அருகே எண்ணெயுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 டேங்கர் லாரிகளிலும் தீப்பற்றியதால் அந்த லாரிகள் கொழுந்து விட்டு எரிந்தன. இதனால் அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. தீ விபத்து நடந்த பகுதிக்கு அருகில் வசிக்கும் பொதுமக்களை போலீசார் அப்பகுதியில் இருந்து வெளியேற்றினர். புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

மேலும், எண்ணெய் குடோனில் ஏற்பட்ட தீயை கடும் சவாலுக்கு பின்னர் ரசாயண திரவத்தை கொண்டு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் பல கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது. எண்ணெய் குடோனில் ஏற்பட்ட தீவிபத்து பின்னர் மற்ற இடங்களுக்கும் பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com