பெரியகுளம் அருகே பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் பலியாகினர்.

மின் கம்பம் அடியோடு முறிந்து டிராக்டர் மீது விழுந்தது.
டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் பலியாகினர்
Published on

பெரியகுளம்,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து

பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி இளங்கோவன் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 50). இவரது உறவினர் ரவிச்சந்திரன் (37). இவர்கள் இருவரும் ஜெயமங்கலம் அருகே உள்ள கீழக்காமக்காபட்டி பகுதியில் உள்ள ஒரு கிரசரில் இருந்து டிராக்டரில் எம்-சாண்ட் மணலை ஏற்றிக்கொண்டு கைலாசபட்டி நோக்கி புறப்பட்டனர்.

டிராக்டரை ரவிச்சந்திரன் ஓட்டினார். டிராக்டர் மேல்மங்கலம் சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது.

மின்கம்பம் முறிந்து விழுந்தது

பள்ளத்தில் கவிழ்ந்த வேகத்தில் அங்கிருந்த மின்சார கம்பத்தின் மீது டிராக்டர் பலமாக மோதியது. இதில் மின் கம்பம் அடியோடு முறிந்து டிராக்டர் மீது விழுந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய ரவிச்சந்திரன் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

போலீசார் விசாரணை

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஜெயமங்கலம் போலீசார் மற்றும் கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இடிபாடுகளில் சடலமாக கிடந்த இருவரையும் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, உடனடியாக ஜே.சி.பி. வரவழைக்கப்பட்டு, இடிபாடுகள் மற்றும் மின் கம்பம் அகற்றப்பட்டது. பின்னர் இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com