கிணற்றை தூர்வாரியபோது விஷவாயு தாக்கி தந்தை, மகன் பலி

மகன் நீண்ட நேரமாகியும் மேலே வராததைக் கண்டு அதிர்ச்சியடைந்த தந்தை ரவி, அவரை மீட்பதற்காக உடனடியாக கிணற்றுக்குள் இறங்கியுள்ளார்.
விஷவாயு தாக்கி பலி.
தந்தை -மகன் உயிரிழப்பு
Published on

சென்னை,

சென்னை யானைக்கவுனி பகுதியில் உள்ள 45 அடி ஆழமுள்ள கிணறு ஒன்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த தந்தை மற்றும் அவரது மகன் ஆகிய 2 பேர் விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிணற்றை தூர்வாரும் பணி

சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 52). இவரது மகன் அய்யனார் (வயது 21). தொழிலாளர்களான இவர்கள் 2 பேரும், இன்று (புதன்கிழமை) சென்னை யானைக்கவுனி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் இருந்த 45 அடி ஆழமுள்ள கிணற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

விஷவாயு தாக்கி பலி

கிணற்றை தூர்வாருவதற்காக முதலில் கிணற்றின் ஆழ பகுதிக்கு அய்யனார் சென்றார். அப்போது திடீரென அங்கு தேங்கியிருந்த விஷவாயுவை சுவாசித்ததால் அவர் மூச்சுத்திணறி அங்கேயே மயங்கி விழுந்தார். மகன் நீண்ட நேரமாகியும் மேலே வராததால் அதிர்ச்சியடைந்த தந்தை ரவி, அவரை மீட்பதற்காக உடனடியாக கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். துரதிர்ஷ்டவசமாக, கிணற்றின் அடிப் பகுதியில் அடர்த்தியாக இருந்த விஷவாயு ரவியையும் தாக்கவே, அவரும் அதே இடத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

மீட்புப் பணிகள்- விசாரணை

அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர், முகமூடி மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் போன்ற பாதுகாப்பு உபகரணங்களுடன் கிணற்றுக்குள் இறங்கினர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ரவி மற்றும் அய்யனாரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து யானைகவுனி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com