

தென்காசி,
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி தென்காசி மாவட்டமான குற்றாலம், கடையம், கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
இந்த நிலையில் கடையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலையில் மழை வெளுத்து வாங்கியது. சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
வீடு இடிந்து விழுந்தது
கடையம் அருகே உள்ள வாகைக்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கல்யாண சுந்தரம்(வயது 60), விவசாயி. இவரது மனைவி வேலம்மாள்(55), இளைய மகள் ரேவதி(26).
நேற்று முன்தினம் மழை பெய்தபோது கல்யாண சுந்தரத்தின் வீடு மழையில் மிகவும் நனைந்து இருந்ததாக கூறப்படுகிறது. இரவில் கல்யாண சுந்தரம் தனது மனைவி, மகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். நள்ளிரவில் திடீரென்று பயங்கர சத்தத்துடன் அந்த வீடு இடிந்து விழுந்தது.
தந்தை-மகள் பலி
இதில் இடிபாடுகளில் கணவன், மனைவி, மகள் 3 பேரும் சிக்கி கொண்டனர். கல்யாண சுந்தரம், ரேவதி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். வேலம்மாள் படுகாயம் அடைந்தார்.