

மதுரை,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவருக்கு 2-வது திருமணமாகி கணவருடன் வசித்து வந்தார். திருமணத்தின்போது அவர் போதிய நகை, சீர் வரிசை கொண்டு வரவில்லை எனவும், 30 சவரன் நகை கூடுதலாக கேட்டு இளம்பெண்ணின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் அடிக்கடி தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் 3 பேரும் சேர்ந்து கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இளம்பெண்ணின் செல்போனுக்கு அவரது மாமனார் ஆபாசமான வீடியோக்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் இதுகுறித்து சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இது தொடர்பாக இளம்பெண்ணின் மாமனாரை கைது செய்தனர். அதேபோல் வரதட்சணை கொடுமை செய்ததாக அந்த பெண்ணின் கணவரையும் கைது செய்தனர். இளம்பெண்ணின் செல்போனுக்கு அவரது மாமனார் ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.