மாமனார், மாமியார் ஓட, ஓட விரட்டிக் கொலை ரத்தக்கறையுடன் சுற்றிய வாலிபர் போலீசில் சிக்கினார்

சமரசம் பேச வந்த மாமனார், மாமியாரை ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொன்ற வாலிபர் போலீசிடம் சிக்கினார்.
மாமனார், மாமியார் ஓட, ஓட விரட்டிக் கொலை ரத்தக்கறையுடன் சுற்றிய வாலிபர் போலீசில் சிக்கினார்
Published on

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் கீழசிம்பூர் கிராமத்தை சேர்ந்த பாண்டி மகன் கணேசனும் (வயது 31), வீரசோழன் பகுதியை சேர்ந்த செந்தில்வேல் மகள் முனீஸ்வரியும் (25) காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் கணேசனுக்கும், கீழசிம்பூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்களின் கள்ளத்தொடர்பு விவரம் முனீஸ்வரிக்கு தெரியவந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 21-ந் தேதி முனீஸ்வரியை வீரசோழன் பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிட்ட கணேசன், உன்னுடன் இனி சேர்ந்து வாழ முடியாது என கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த முனீஸ்வரி தனது நிலை குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து கணேசனை சமரசம் செய்து முனீஸ்வரிடன் சேர்த்து வைக்க அவருடைய தந்தை செந்தில்வேல், தாய் வனிதா ஆகியோர் முடிவு செய்தனர். இதற்காக இருவரும் நேற்று முன்தினம் இரவில் தனது மருமகன் வீட்டிற்கு சென்று கணேசனின் தந்தை பாண்டியை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த கணேசன், பாண்டி ஆகியோர் செந்தில்வேலையும், வனிதாவையும் சரமாரியாக தாக்கினர். இதனால் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பியோடினர். இருப்பினும் ஆத்திரம் அடங்காத தந்தை, மகனும் ஓட, ஓட விரட்டி சென்று அரிவாளால் வெட்டினர். இதில் செந்தில்வேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். வனிதாவையும் கொடூரமாக வெட்டிக் கொன்றனர். பின்னர் கணேசனும், அவருடைய தந்தையும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

தப்பியோடிய கணேசன், ரத்தக்கறை படிந்த சட்டையுடன் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் சுற்றி திரிந்தார். அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் மாமனார், மாமியாரை வெட்டிக் கொன்றது தெரியவந்தது.

இதற்கிடையே நேற்று மாலையில் கணேசனின் தந்தை பாண்டி முதுகுளத்தூர் போலீசில் சரண் அடைந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com