தலையணையால் அமுக்கி மகனை கொன்ற தந்தை: உடல் நலம் பாதித்து இறந்ததாக நாடகம்

மர்மச்சாவில் திடீர் திருப்பமாக மகனை தலையணையால் அமுக்கி கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி அண்ணாநகரைச் சேர்ந்தவர் மருதுபாண்டி (வயது 47). இவர் கோவில்பட்டி அருகே உள்ள கடலையூர் சாலையில் சிமெண்டு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி அமுதா. இவர்களது மகன் தர்மதுரை (23), கூலித்தொழிலாளி.
தர்மதுரைக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாகவும், வீட்டிற்கு வந்து பெற்றோருடன் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், வேலைக்கு செல்லாமல் தனது தந்தையிடம் சண்டையிட்டு வந்தார். கடந்த 21-ந் தேதி வீட்டில் மருதுபாண்டி மட்டும் இருந்தார். அப்போது, அங்கு தர்மதுரை வந்தார். அவர் தனது தந்தையிடம் மதுக்குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்து, தாக்க முயன்றார்.
இதில் ஆத்திரம் அடைந்த மருதுபாண்டி, தர்மதுரையை கீழே தள்ளினார். அப்போது, அவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்டது. இதுபற்றி நாலாட்டின்புத்தூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில், தர்மதுரையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் அறிக்கை போலீசில் வழங்கப்பட்டது. அதில் அவர் மூச்சுவிட முடியால் அமுக்கப்பட்டு, மூச்சுத்திணறி உயிரிழந்தது தெரியவந்தது.
இதனால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். சம்பவம் நடந்த அன்று வீட்டில் இருந்த மருதுபாண்டியிடம் துருவி, துருவி விசாரணை மேற்கொண்டதில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அதாவது, வீட்டில் தந்தை-மகனிடையே ஏற்பட்ட தகராறில் மருதுபாண்டி, தர்மதுரையை கீழே தள்ளிவிட்டார்.
பின்னர் அருகில் கிடந்த தலையணையால் அவரது முகத்தை அமுக்கி மூச்சை திணறடித்து கொலை செய்தது தெரியவந்தது. மகன் இறந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் என்ன செய்வதென்று திகைத்து நின்றார். உடனே அக்கம்பக்கத்தினரிடம் தனது மகன் மயங்கி விழுந்துவிட்டதாக கூறி நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மர்மச்சாவு வழக்கை கொலை வழக்காக மாற்றி, மருதுபாண்டியை நேற்று கைது செய்தனர்.






