காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை: கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு

கோப்புப்படம்
காதலை மறந்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்துமாறு மாணவியிடம் அவரது தந்தை கூறியுள்ளார்.
ஈரோடு கோட்டை முனியப்பன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் குருராஜன். இவருடைய மகள் நந்தினி (19 வயது). இவர் ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவரது வீட்டின் மேல்மாடியில் வசிக்கும் சரவணன் என்பவருக்கும், நந்தினிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், அவர்களது காதல் விவரம் குருராஜனுக்கு தெரியவந்தது. இதனால் 2 நாட்களுக்கு முன்பு அவர் தனது மகளை அழைத்து அறிவுரை வழங்கினார். அப்போது காதலை மறந்துவிட்டு படிப்பில் முழு கவனம் செலுத்துமாறு கூறியதாக தெரிகிறது. காதலை தந்தை கண்டித்ததால் நந்தினி மனவேதனையுடன் காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று காலையில் குளித்து விட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு படுக்கை அறைக்குள் சென்ற நந்தினி, நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குருராஜன் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது நந்தினி மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தொங்கி கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர் நந்தினியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே நந்தினி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






