அடக்கம் செய்ய பணம் இல்லாததால் இறந்த குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய தந்தை

இறந்த குழந்தையின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாததால் தந்தையே குப்பைத்தொட்டியில் வீசி சென்ற நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் திருவல்லிக்கேணியில் நடைபெற்றுள்ளது.
அடக்கம் செய்ய பணம் இல்லாததால் இறந்த குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய தந்தை
Published on

சென்னை திருவல்லிக்கேணி சி.என்.கே.சாலையில் உள்ள குப்பை தொட்டியில் சணல் பையில் இருந்த பச்சிளம் குழந்தையின் உடலை தெரு நாய்கள் கவ்வி இழுத்து செல்வதாக திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி கமிஷனர் எம்.எஸ்.பாஸ்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். குப்பை தொட்டியில் கிடந்த குழந்தையின் உடலை மீட்டனர்.

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் திருவல்லிக்கேணி கஸ்தூரிபா அரசு ஆஸ்பத்திரியில் கவிதா என்ற பெண்ணுக்கு இறந்த நிலையில் பிறந்த குழந்தையை அவரது கணவர் தனுஷ் குப்பைத்தொட்டியில் வீசி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து தனுசை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் அளித்த வாக்குமூலத்தை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர் போலீசாரிடம் கண்ணீர் மல்க கூறியதாவது:-

எனக்கு கவிதா, 2-வது மனைவி ஆவார். முதல் மனைவி இறந்துவிட்டார். அவருக்கு பிறந்த குழந்தையும் இறந்துவிட்டது. நான் சிறு, சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தேன். பின்னர் வெளியே வந்தவுடன் கூலி வேலைக்கு சென்று திருந்தி வாழ்கிறேன்.

இந்த நிலையில் 2-வது மனைவிக்கு பிறந்த குழந்தையும் இறந்துவிட்டதால், என்னால் துக்கம் தாங்க முடியாமல் 'டாஸ்மாக்' கடைக்கு சென்று மது அருந்தினேன். அப்போது குழந்தையை அடக்க செய்ய வேண்டும் என்றால் ரூ.3 ஆயிரம் செலவாகுமே? என்று எண்ணினேன். எனது பாக்கெட்டில் ரூ.150 மட்டும் இருந்தது. அதில் 10 ரூபாய்க்கு சணல் பையை வாங்கினேன். அதில் குழந்தையை போட்டு குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு வந்தேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தனுசுக்கு உதவி கமிஷனர் எம்.எஸ்.பாஸ்கர் ஆறுதல் கூறினார். சென்னை போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்த 'காக்கும் கரங்கள்' அமைப்பில் உள்ள உறவுகள் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் பச்சிளம் குழந்தையை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அதன்படி பச்சிளங்குழந்தை உடல் கிருஷ்ணாம்பேட்டை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. உதவி கமிஷனர் எம்.எஸ்.பாஸ்கர் தலைமையிலான போலீசாரின் மனிதநேய செயலை உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com