தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள்தான் - அன்புமணி ராமதாஸ் தந்தையர் தின வாழ்த்து

கோப்புப்படம்
தந்தையர் நாளில் மட்டுமின்றி எல்லா நாளும் தந்தையரை வணங்குவோம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையிலான மோதல் போக்கு நீடித்து வருகிறது. நேற்று முன்தினம் தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், "பெற்றோர் உயிருடன் இருக்கும்போதே பிள்ளைகள் அவர்களை கொண்டாட வேண்டும். தந்தை, தாயை மதிக்க வேண்டும் என சொன்னாலே அன்புமணிக்கு கோபம் வருகிறது.
தந்தை, தாயை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். ஆனால் அன்புமணி மைக்கை தூக்கி அடிக்கிறார். பாட்டிலை எடுத்து தாயை அடிக்கிறார். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை எனக் கூறினால் அதெல்லாம் பொய் என அன்புமணி கூறுவார்" என்று கூறியிருந்தார்.
இன்று உலக தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தந்தையர் தினத்தை முன்னிட்டு அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், "தியாக தீபங்களான தந்தையரை எல்லா நாளும் வணங்குவோம்! தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள்தான். ஆக்குதல் அன்னையரின் பணி என்றால், அன்பாக வளர்ப்பது தந்தையரின் திருப்பணி. தந்தையர் நாளில் மட்டுமின்றி எல்லா நாளும் தந்தையரை வணங்குவோம்!" என்று தெரிவித்துள்ளார்.






