

திருப்பத்தூர்,
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை அடுத்த ஜி.பட்டவாடா கிராமத்தை சேர்ந்தவர் கலும் சத்யநாராயணா (வயது 30). இவரும் அதே பகுதியை சேர்ந்த காரம்வீரபாபு (20) உள்பட 4 பேரும் திருப்பூருக்கு, பொகாரோ எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று முன்தினம் பயணம் செய்தனர்.
ரெயில் கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே சென்றபோது படிக்கட்டின் அருகில் நின்ற கலும் சத்யநாராயணாவிடம் திருநங்கைகள் சிலர் பிச்சை கேட்டனர். அவர் பணம் இல்லை என கூறியதால் அந்த திருநங்கைகள் அவரை அடித்து ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளியதில் கலும் சத்யநாராயணா இறந்தார். அவரை காப்பாற்ற முயன்ற காரம்வீரபாபுவும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
இதுபற்றி சேலம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தியபோது திருப்பத்தூர் அருகே உள்ள பாச்சல் ஜெய்பீம் நகரை சேர்ந்த சக்தி என்ற சுவேதா (36) என்ற திருநங்கை உள்பட சில திருநங்கைகள் தான் கலும்சத்யநாராயணாவை கீழே தள்ளியது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் போலீஸ் விசாரணைக்கு பயந்து திருநங்கை சுவேதா விஷம் குடித்தார். மயங்கிய நிலையில் இருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு உடல் நலம் சற்று தேறியதும் போலீசார் சுவேதாவை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
இதனிடையே தகவல் அறிந்து அங்கு திரண்டு வந்த திருநங்கைகள் சிலர் இந்த சம்பவத்தில், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றனர்.
மயக்கம் தெளிந்த நிலையில் திருநங்கை சுவேதா நிருபர்களிடம் கூறியதாவது: நாங்கள் ரெயிலில் பயணிகளிடம் பணம் கேட்டு கொண்டிருந்தோம். அப்போது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் ரூ.2 ஆயிரத்தை நீங்கள் திருடிவிட்டீர்கள் எனக்கூறி என்னை காலால் உதைத்தனர்.
பதிலுக்கு நான் அவர்களை கன்னத்தில் அடித்தபோது சக பயணிகள் ஒன்று சேர்ந்து என்னை தாக்கினர். இதனால் நான் தப்பி சென்று விட்டேன்.
அந்த சமயம் யாரோ ரெயிலில் இருந்து கீழே விழும் சத்தம் கேட்டது. மற்றபடி யார் அந்த நபரை கீழே தள்ளிவிட்டார்கள்? என தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.